Thursday 6 November 2014

கொண்டையா ராஜு: காலண்டர் ஓவியங்களின் பிதாமகன்

காலையில் எழுந்தவுடன் காலண்டர் பார்க்கும் பழக்கம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இருந்தது. இப்போது படுக்கைக்கு அருகிலேயே செல்பேசியில் நாள், நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்த்துக்கொள்கிறோம். காலண்டர்களில் நாள் கிழமை பற்றிய தகவல்கள் ஒருபுறம் இருந்தாலும், பரவசப்படுத்தும் பக்தி ஓவியங்கள்தான் நம் நினைவில் பதிந்திருக்கின்றன. காலண்டர் தயாரிப்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது சிவகாசி நகரம் என்றால், காலண்டர் ஓவியக் கலையை வளர்த்தெடுத்தது கொண்டையா ராஜு போன்ற மிகச் சிறந்த கலைஞர்கள்தான்.
ரமணரைத் ‘திருத்தியவர்’
கொண்டையா ராஜு சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் பயின்றவர். 1918-ம் ஆண்டு மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1920-வாக்கில் தனிமையை நாடி திருவண்ணாமலை சென்று, ரமணாஸ் ரமத்தில் பிற சீடர்களுடன் சேர்ந்து பிச்சை எடுத்து பிரம் மச்சாரியாக ஆசிரமத்தில் வாழ்ந்துவந்தார். அப்போது ஒரு அன்பர், ரமணரின் முழு உருவப் படத்தை பெரிய அளவில் வரைந்து எடுத்துவந்து அவரிடம் காட்டினார். படத்தில் ஏதோ குறையிருக்கிறது என்றார் ரமணர். அருகிலிருந்த கொண்டையா ராஜு, “ஸ்வாமிகள் அனுமதித்தால் அதை நான் சரிசெய்கிறேன்” என்றார். “உனக்கு ஓவியம் வரையத் தெரியுமா?” என்று ரமணர் கேட்க, ஓரளவுக்குத் தெரியும் என்று தன்னடக்கத்துடன் கூறிய ராஜு படத்தை நன்றாகத் திருத்தி அழகுபடுத்தினார். அந்தப் படத்தைப் பார்த்த ரமணர், “இவ்வளவு கலைத் திறமை கொண்ட உனக்கு ஆசிரமத்தில் என்ன வேலை? உன் கலையால் உலகம் பயனடைய வேளை வந்துவிட்டது” என்று கூறி ஆசிர்வதித்து ஆசிரமத்திலிருந்து அனுப்பி வைத்தார்.
அந்தச் சமயத்தில் ஆசிரமத்துடன் தொடர்பில் இருந்த நகராட்சித் தலைவர் ராமசாமி ஐயர் மூலம், மதுரையைச் சேர்ந்த நாடக சபை உரிமையாளர் டி.என். பழனியப்பப் பிள்ளை, நாடக சீனுக்கான திரைச்சீலை ஓவியராக ராஜுவை அமர்த்திக்கொண்டார். அந்த நாடக கம்பெனி தமிழகம், இலங்கை முழுவதும் பயணம் செய்து நாடகம் நடத்தியது. பிறகு, அந்த கம்பெனி நொடித்துப்போய்விட்டது. 1942-ல் கோவில்பட்டியில் தங்கினார் ராஜு. தன்னை நம்பிவந்த சீடர்களையும் வளர்க்க, தேவி ஆர்ட் ஸ்டுடியோ என்ற கலைக்கூடத்தை நிறுவி, உள்ளூர் கோயில் அம்மன்களை வரைந்து வெளியிடலானார். இந்து புராண காவிய மரபையொட்டி கடவுளர் படங்களை வரைந்த ராஜா ரவிவர்மாவின் மரபில், ராஜுவும் கடவுளர்களை அழகிய ஓவியங்களாக வரைந்தார். காவியக் காட்சிகளும் அவரது ஓவியத் திறமையால் உயிர்கொண்டன. மக்களிடம் அவரது ஓவியங்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது.
தன்னுடைய சீடர்களைப் பிள்ளைகளாகக் கருதினார். டி.எஸ். சுப்பையா, ராமலிங்கம், டி.எஸ். மீனாட்சி சுந்தரம், டி.எஸ். அருணாசலம், செண்பகராமன் சீனிவாசன் ஆகியோர் அவருடைய சீடர்கள். ஒவ்வொருவரும் தனித்தனி பாணியை உருவாக்கிக்கொண்டனர்.
முதல் காலண்டர்
சிவகாசி அச்சகத்தார் முதலில் கொண்டையா ராஜுவைத் தொடர்புகொண்டபோது, விருதுநகர் அம்பாள் காபி நிறுவனத்துக்காக முதலில் தயாரானது மீனாட்சி திருக்கல்யாணம். கொண்டையா ராஜுவின் பெயரில் வரையப்
பட்டிருந்தாலும் வரைந்தவர் ராமலிங்கம். அவருடைய சீடர்கள் தங்களுடைய படங்களுக்கு அவருடைய பெயரை முதலில் எழுதி, பிறகு தங்களுடைய பெயரை இணைப் பதை மரபாக வைத்திருந்தனர். கே. மாதவன் சமூகக் காட்சிகளையும் தமிழர் பண்பாட்டையும் சித்தரிக்கும் ஓவியங்களை வரைந்து அச்சிட்டார்.
வடக்கத்திய ஓவியர்கள் முல்காவுங்கர், பண்டிட் ராம்குமார் சர்தர் போன்றவர்களின் வருகை காலண்டர் உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. திரைப்பட நிறுவனங்களில் கலை இயக்குநர்களாக வேலை பார்த்த இந்த ஓவியர்கள் உருவாக்கிய காலண்டர்கள் புதிய தனித்துவத்துடன் விளங்கின. கண்ணைக் கவரும் வண்ணங்களில், புதிய கோணங்களில் கடவுள்கள், மோனோடோன் காலண்டர்கள் என்று காலண்டர்களை உருவாக்கினார்கள். வடக்கத்திய ஓவியர்களின் பாணி, கோவில்பட்டி காலண்டர் ஓவியங்களில் புதிய உருமாற்றத்தைக் கொண்டுவந்தது.
குறிப்பிட்ட சில கம்பெனிகள் காலண்டருக்கெனத் தனி தெய்வங்கள், கோயில் தெய்வங்கள் என வெளியிட்டுவந்தன. பெங்களூர் கணேஷ் பீடி கம்பெனி பிள்ளையாரின் திரு விளையாடல் காட்சிகளையும், பெங்களூர் எம்.ஜி.பிரதர் லாரி கம்பெனி ராகவேந்தர் படங்களையும், நல்லி சில்க்ஸ் பெண் சக்தி தெய்வங்களையும், மேட்டூர் கெமிக்கல்ஸ் கம்பெனி புதிய புதிய கோயில்களுக்குச் சென்று வரலாற்று விவரங்களுடன் அந்த ஊர் தெய்வங்களையும், ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் கம்பெனி அனுமன் படத்தையும், கிரைப் வாட்டர் கம்பெனி கிருஷ்ணன் உருவங்களைத் தாங்கி காலண்டர் படங்களை வெளியிட்டுவந்தன.
லட்சுமி, பிள்ளையார்…
பல்வேறு கலைஞர்களின் வருகையில் பின்னணிக் காட்சிகள், வண்ணங்கள் மட்டுமே மாறி வந்தன. எனினும், யாரும் லட்சுமி சேலையை வெள்ளையாகவோ, சரஸ்வதி சேலையை வெள்ளையின்றி வேறு நிறத்திலோ தீட்ட வில்லை. காரணம், ஐதீகம் குறித்த நம்பிக்கை. குறிப்பாக, கோவில்பட்டி வகை கலைஞர்கள் ஐதீகம் குறித்து மிகுந்த கவனம் கொண்டவர்கள்.
காலண்டர் யுகத்தின் ஆரம்பத்தில் அதிகம் காணப்பட்ட முருகன் இடத்தை, பிள்ளையார் பிடித்துக்கொண்டார். நாளாக நாளாக லட்சுமி பிரதானமாகச் சித்தரிக்கப்பட்டார். வெங்கடாசலபதி, தீபாவளி பூஜை படங்கள், முருகன், மதுரை மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்கள் போன்றவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. பின்வந்த காலங்களில் அந்தந்த ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்ட தலைவர்கள், சம்பவங்களை வைத்து காலண்டர்கள் வெளிவந்தன.
1980-களில் கொண்டையா ராஜு பாணி ஓவியக் கலை குறித்தான ஆய்வு ஒன்றின் மூலம் அவரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆய்வாளர் ஸ்டீபன். எஸ். இங்க்லீஸ். சிவகாசியில் அச்சிட்டுத் தயாரிக்கப்பட்ட பழைய காலத்து காலண்டர் படங்கள் அனைத்தும் ஸ்டீபன் இங்க்லீஸின் முயற்சியால் கனடா நாட்டு அருங்காட்சியகத்தில் அரிய பெட்டகமாக இன்றும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
வெறுமனே ரசனைக்காக மட்டுமன்றி அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாக, பின்னணியாக இடம்பிடித்தவை காலண்டர் ஓவியங்கள். தொழில்நுட்பம் அழித்துக்கொண்டிருக்கும் அந்த ஓவிய மரபை நினைத்து மனம்குமுறும் யாரும் கொண்டையா ராஜுவை நினைத்து ஒரு கணம் பெருமூச்சு விடாமல் இருக்க மாட்டார்கள். அதுதான் கொண்டையா ராஜுவுக்குச் செலுத்தப்படும் உயர்ந்தபட்ச மரியாதை!
கொண்டையா ராஜு
- ரெங்கையா முருகன், ‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்புக்கு:murugan_kani@yahoo.com
தகவல், ஓவியங்கள் தந்து உதவியவர்: மாரீஸ்

No comments:

Post a Comment