Wednesday 26 November 2014

உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர் ஆண்டர்சன்?

போபால் விஷவாயுக் கசிவு: 30 ஆண்டுகள்
அந்தச் சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன மிஸ்டர் ஆண்டர்சன்!
நீங்கள் தலைமை ஏற்றிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியக் கிளையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தூக்கத்திலேயே, தங்களின் இறுதி மூச்சைச் சுவாசித்து நிரந்த தூக்கத்தில் ஆழ்ந்தார்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியவர்களோ, மூச்சிரைத்துச் செத்தார்கள்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, விதியின் வசத்தால் அந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களில், இன்று உயிருடன் இருப்பவர்கள் சிலரே. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது மட்டும்தான் ஒரே ஆறுதல்.
மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது இப்போது. ஆனால், இன்றைக்கும் அங்குப் பிறக்கும் குழந்தைகள் சித்தச் சுவாதீனமற்று, உடல் குறைபாடுகளுடன், மனிதர்கள் செய்த பிழைக்குச் சாட்சியமாய் இருந்துகொண்டிருக்கின்றன.
இவையெல்லாம், நீங்கள் தலைமறைவாக இருந்த காலத்தில், உங்கள் காதுகளை வந்தடைந்து கொண்டிருந்த செய்திகள்தான் ஆண்டர்சன். ஆனால் உங்களுக்கு, ஏன் இந்த உலகத்துக்கேகூடத் தெரியாத தாயின் கதை ஒன்று உண்டு. திட்டமிடப்படாத அந்தப் படுகொலை நிகழ்வை நினைத்துத் துக்கம் கசிந்துகொண்டிருக்கும் இந்த நாளில், உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவது அந்தக் கதையைத்தான்!
அறியாத கதை
அந்தத் தாயின் பெயர் பிஸ்மில்லா பீ. இன்று அவருக்கு 45 வயதுக்கு மேல். அவருக்கு 3 வயதில் சாஜித் அலி என்ற மகன் இருந்தான். டிசம்பர் 2-ம் தேதி. எல்லாத் தாய்மார்களைப் போலவே, அவரும் தன் மகனைத் தாலாட்டித்தான் படுக்க வைத்தார். கொசுக்கள் தீண்டக் கூடாது என்பதற்காகக் கொசுவலைக்குள் அவனைப் பத்திரப்படுத்தினார். உறங்கும் குழந்தையின் முகத்தைக் கண்ட மகிழ்ச்சியில் அவரும் நிம்மதியாக உறங்கிப் போனார்.
நள்ளிரவு. அமைதியைக் கிழித்துக்கொண்டு திடீரென ஊரெல்லாம் ஒரே கூச்சல் பேரலை போல எழுந்தது. காற்றில் வேகவைத்த முட்டைக்கோஸின் தீவிரமான நெடி. கண்களில் மிளகாயைத் தூவியதைப் போன்ற கடுமையான எரிச்சல். வீட்டைவிட்டு அனைவரும் ஓடிக்கொண்டிருந்தார்கள். விபரீதம் அறிந்து, தன் மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார் பிஸ்மில்லா பீ.
சில மணிநேரம் கழித்து அபாயம் கடந்துவிட்டதாகச் செய்தி வந்தது. அனைவரும் வீட்டுக்குத் திரும்பினார்கள். வாயு திரையாய் மறைத்த கண்களுடன், அந்தத் தாய் தன் வீட்டை எப்படியோ கண்டடைந்தார். தன் மகனிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குடித்தார். மயக்கமானார்.
பிழைத்தலும் இழத்தலும்
மருத்துவமனை. ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டு நினைவிழந்து கிடந்தார். அவருடைய உயிருக்கு 24 மணி நேரம் கெடு வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவரை அழவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அழுதால் அவரின் பார்வை பறிபோக நேரிடலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தன் மகன் மீது கொண்ட பாசத்தாலோ என்னவோ... உயிர் பிழைத்தார். பார்வை இன்னமும் அதேபோல மங்கலாகத்தான் தெரிந்தது!
நினைவு திரும்பியதும் தன் மகன் எங்கே என்றுதான் முதலில் கேட்டார். அவனை வேறொரு இடத்தில் தங்க வைத்திருப்பதாகக் கூறினார்கள். அவனை ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் என்றார். ‘அவன் மயக்கமாக இருக்கிறான்' என்று சொல்லி, அவரிடம் சாஜித் அலியைக் கொடுத்தார்கள். தன் உடலோடு சேர்த்து வைத்துக்கொண்டு, அவனுடைய உடலுக்கு வெப்பத்தைக் கடத்தினாள். ஆனால் பாவம், உயிரற்ற சடலத்துக்கு எவ்வளவு வெப்பம் தந்து உயிர்ப்பிக்க முடியும்?
எஞ்சிய ஸ்வெட்டர்
மீண்டும் மயக்கம். இரண்டு மாதங்கள் மருத்துவமனையிலேயே கிடந்தார். அன்பு மேலோங்க ‘சாஜித்' என்று தன் மகனின் பெயரை அவர் அழைத்துக்கொண்டே இருந்தார். அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக அவரிடத்தில் உண்மை தெரிவிக்கப்பட்டது.
அப்புறம் அவருடைய வாழ்க்கையில் எல்லாத் தாலாட்டு பாடல்களும் அர்த்தமற்றதாகப் போய்விட்டன ஆண்டர்சன்! சாஜித்தின் நினைவை மறக்கடிக்க, அவன் விளையாடிய பொம்மைகள் உட்பட அனைத்தையும் அவனுடைய குடும்பத்தினர் அவருக்குத் தெரியாமலேயே கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டனர்.
சம்பவத் தினத்தில் சாஜித் அணிந்திருந்த ‘ஸ்வெட்டர்' தற்போது போபால் விபத்து தொடர்பாக அமைக்கப்படும் நினைவகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. மனதில் அடியில் ஈரம் ஒட்டிக்கொண்டிருக்கும் யார் அந்த ‘ஸ்வெட்டரை' தொட்டுப் பார்த்தாலும், சாஜித்தின் உடலை ஸ்பரிசித்துப் பார்க்க முடியும் ஆண்டர்சன்!
அழுது என்ன பண்ண?
எல்லாத் தாயைப் போலவும் தன் மகனைப் பற்றிக் கனவு கண்டதுதான் பிஸ்மில்லா பீயின் குற்றமா? இன்று சாஜித் உயிருடன் இருந்தால் அவனுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருந்திருக்கும். அவன் பிறந்தநாளின்போது ஊரைக் கூட்டிவைத்து, அவ்வளவு மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்களாம். ஆனால் பிறந்தநாளைப் போல இறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட முடியாதல்லவா?
விதியின் விளையாட்டைப் பாருங்கள்... அந்த விஷவாயுக் கசிவு ஏற்பட்ட அடுத்த ஆண்டில் அந்தத் தாய்க்கு ஒரு குழந்தை பிறந்தது. நீலம் பாரித்த உடலுடன் பிறந்த அந்தக் குழந்தை, அடுத்த 24 மணி நேரம்வரை அழவேயில்லை. நச்சு மட்டுமே நிரம்பிய அந்த மண்ணில் பிறந்ததற்காக, எவ்வளவு அழுதாலும் பயனில்லை என்பது அந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்குமோ மிஸ்டர் ஆண்டர்சன்?
நச்சு அகற்றப்படவில்லை நஷ்ட ஈடும் இல்லை
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு உர நிறுவனத்தில் 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு விஷவாயு கசிந்தது. நிறுவனத்தின் கட்டாயச் செலவுக் குறைப்பே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் வாரன் ஆண்டர்சன். அமெரிக்காவில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய இவர் கடந்த செப்டம்பர் மாதம்தான் இறந்தார்.
போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தை டோ நிறுவனம் எப்போதோ வாங்கிவிட்டாலும், கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையும், அங்கிருக்கும் நச்சு வேதிப்பொருட்களும் இன்றுவரை அகற்றப்படவில்லை. இந்த ஆண்டுடன் போபால் விஷவாயுக் கசிவு நிகழ்ந்து 30 ஆண்டுகள் முடிந்துவிட்டன. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் யூனியன் கார்பைடு நிறுவனமோ, மத்திய அரசோ இதுவரை முறையான நஷ்ட ஈட்டை வழங்கவில்லை.
இங்கு இடம்பெற்றுள்ள கறுப்பு/வெள்ளை படங்களை எடுத்தவர் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் ரகு ராய். போபால் விபத்து நடந்த காலத்திலிருந்து இந்தப் போராட்டத்தை அவர் ஒளிப்பட ஆவணமாக்கி வருகிறார்.
 - ரகுராய்

No comments:

Post a Comment