Friday 21 November 2014

இன்று அன்று| 1970 நவம்பர் 21: மறைந்தார் சர் சி.வி.ராமன்

நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இந்தியர் சர்.சி.வி. ராமன். 1888 நவம்பர் 7-ல் திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவலில் பிறந்த ராமனின் முழுப்பெயர், சந்திரசேகர வெங்கடராமன்.
கல்வியில் சிறந்துவிளங்கிய அவர், விசாகப்பட்டினத்தில் உள்ள செயின்ட் அலோய்சியஸ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் படித்தார். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தங்கப்பதக்கமும் வென்றார். அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஒலி, ஒளி, காந்த சக்தி ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் செய்தார்.
1907-ல் கல்கத்தாவில் இந்திய அரசுப் பணவியல் துறையில் பணியில் சேர்ந்தார். எனினும், தனது ஆராய்ச்சிகளை அவர் கைவிடவில்லை. ஓய்வு நேரங்களில் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில், ஒலியியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார். 1917-ல் கல்கத்தா பல்கலைக்கழகத் தில் பேராசிரியர் பணி கிடைத்தது. 1921-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் அதுதான். பயணத்தின்போதும் ஆராய்ச்சிக்கு அவர் ஓய்வுகொடுக்கவில்லை.
கடலின் நீல நிறத்துக்குக் காரணம் என்ன என்று ஆய்வுசெய்தார். ‘கடலின் நிறம்’ என்ற பெயரில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை, ‘நேச்சர்’ இதழில் வெளியானது. ஐரோப்பாவிலும் அவரது புகழ் பரவியது. 1929-ல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கிக் கவுரவித்தது.
ஒளிபுகும் ஊடகம் ஒன்றின் மூலம் ஒளி பாயும்போது, சில ஒலிக்கற்றைகளின் அலைநீளம் மாறுதல் அடைவதைக் கண்டறிந்தார் ராமன். இந்தக் கண்டுபிடிப்புக்கு ‘ராமன் விளைவு’ என்று பெயர்.
1928-ல் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய ராமனுக்கு, 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கண்டுபிடிப்புக்காக மிகக் குறைந்த கால இடைவெளியில் வழங்கப்பட்ட விருது அது. பல சிறப்புகளைப் பெற்ற ராமன், 1948-ல் பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிறுவன’த்தை நிறுவினார். அதன் இயக்குநராக இருந்த ராமன், 1970-ல், இதேநாளில், தனது 82-வது வயதில் மரணமடைந்தார்.

No comments:

Post a Comment