Wednesday 26 November 2014

புத்தர் பாதம் படிந்த சுவடுகள்

இந்தியாவுக்கு வெளியே பவுத்தம் பரப்பிய கனிஷ்கர் மறைந்து முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் தற்போது ஸிங்கியாங் என்றழைக்கப்படும் பகுதியிலும் வேறு பல பகுதிகளிலும் புத்த மதமே பரவலாக இருந்தது. இந்தியாவுக்குப் பயணம் புறப்பட்ட ஃபாஹியான், அங்கெல்லாம் இருந்த மடாலயங்களில் ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் புத்த நெறிமுறைகளைப் பின்பற்றி வந்ததைப் பார்த்தார். தன் பயணம் தொடங்கியது முதல், பல்வேறு விஷயங்களைப் பற்றிய குறிப்புகளை அவர் எழுதியிருக்கிறார்.
அதேபோல, மத ஊர்வலங்கள் இன்றைக்கு நடப்பதை ஒத்ததாக இருந்திருக்கின்றன. திருவிழாக் காலங்களில் பட்டுக் கொடிகள், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வைத்துப் புத்தர், இந்து தெய்வங்களுடைய சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அரசனும் அரசியும் மலர்கள் தூவி, ஆரத்தி எடுத்துச் செல்வத்தைத் தானம் செய்துள்ளனர்.
புத்தச் சின்னங்கள்
ஃபாஹியான் இந்தியாவுக்கு வந்த காலத்தில் சந்திரகுப்த விக்கிரமாதித்யர் ஆட்சி நடத்தி வந்தார். காஷ்மீரில் ஸ்கார்டோ என்ற இடத்தில் பஞ்சப் பரிஷத் அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கூடும் சபை ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்தச் சபையின் முடிவில் அரசரும் அவருடைய அமைச்சர்களும் புத்த பிட்சுகளுக்குத் தானம் அளித்துள்ளனர். இங்கிருந்த மடாலயம் ஒன்றில் புத்தரின் பல், கிண்ணம், வேறு பல சின்னங்களையும் ஃபாஹியான் தரிசித்தார்.
காந்தாரத்தில் பாறை ஒன்றின் மீது புத்தரின் பாதச் சுவடுகளைக் கண்டார். மத்திய இந்தியாவில் புத்தர் நீராடிய இடம், முடியைக் களைந்த இடம் போன்ற புனிதப் பகுதிகளுக்கும் சென்று ஃபாஹியான் தரிசித்தார். அதேநேரம் கபிலவஸ்து, சிராவஸ்தி, ராஜகிரஹம், கயை முதலிய பவுத்தப் புண்ணியத் தலங்கள் பாழடைந்து இருந்ததையும் ஃபாஹியான் கண்டார்.
புத்தரின் சமகாலத்தவரான கோசல மன்னர் பிரசன்னஜித் முதன்முதலாகப் புத்தர் சிலை ஒன்றைச் சந்தன மரத்தில் உருவாக்கி இருக்கிறார். அந்தச் சிலையை எல்லோரும் வணங்கிவந்தனர். இந்த வகையில் புத்தர் காலத்திலேயே அல்லது அவர் காலமான சிறிது காலத்திலேயே புத்தர் சிலையை வழிபடும் முறை மெல்ல மெல்லத் தொடங்கிவிட்டது.
பிட்சுகளின் உபசரிப்பு
மதுராவுக்குத் திரும்பும் வழியில் எண்ணற்ற மடாலயங்களில் பல்லாயிரக்கணக்கான துறவிகள் வாழ்ந்து வந்ததை ஃபாஹியான் கண்டார். செல்வந்தர்களும் அரசர்களும் புத்த மதத்தைத் தழுவாமல் இருந்தாலும்கூட, புத்தப் பிட்சுகளுக்கு மரியாதை செய்ததுடன், தானம் வழங்கி, மடாலயங்களுக்கு மானியமாக நிலங்களையும் எழுதி வைத்துள்ளனர்.
புத்த மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிட்சுகளும் பிக்குணிகளும் மடாலயத்தில் அருகருகே வாழ்ந்துவந்தனர். அவர்கள் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் அவ்வழியாகச் சென்ற துறவிகள், யாத்ரீகர்களிடம் வேறுபாடு காட்டாமல் உபசரித்துள்ளனர்.
இரண்டு தூண்கள்
பெஷாவர் எனப்பட்ட புருஷபுரத்தில் கனிஷ்கர் நிறுவிய புகழ்பெற்ற தூணைக் கண்டார். மற்றொரு தூணில் புத்தரின் திருவோடும், அவருடைய மண்டையோட்டு எலும்பும், அவர் பயன்படுத்திய சந்தனக்கட்டை ஊன்றுகோலும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தன.
‘மலர் நகரம்' என்று அவர் வர்ணித்துள்ள பாடலிபுத்திரத்தில் புத்த மதத்தின் காவலராக இருந்த பேரரசர் அசோகர் 84,000 புத்தக் கோயில்களை எழுப்பி, அவற்றுக்கு மானியங்களும் எழுதிவைத்ததாக அறிந்தார்.
பாடலிபுத்திரத்துக்கு அருகேயுள்ள அசோகரின் சிங்கத் தூணையும் ஃபாஹியான் பாராட்டினார். அந்தத் தூணின் உச்சியில் உள்ள நான்கு சிங்க முத்திரையே, நம் நாட்டின் அரசுச் சின்னமாகத் திகழ்கிறது.

No comments:

Post a Comment