Wednesday 16 April 2014

சூழலியல் முன்னோடி: சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் முதல் புள்ளி

பூச்சிக்கொல்லி மருந்துகள் சுற்றுச்சூழலை நாசப்படுத்துவதைப் பற்றி, இந்த உலகுக்கு முதன்முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன் (1907-1964).
1958-ல் ரேச்சல் கார்சனின் தோழி ஓல்கா ஓவன்ஸ், ரேச்சலுக்கு எழுதியிருந்த கடிதத்தில் தனது ஊரில் வசந்தம் மௌனித்து, நிலம் வாழ்விழந்து போனது பற்றி வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நீண்டகாலமாகவே அக்கறை கொண்டிருந்த ரேச்சலின் கவனத்தை, அது திசைதிருப்பியது. இது சார்ந்து எழுத வேண்டியதன் அவசியத்தை, அந்தச் சம்பவம் அவருக்கு உணர்த்தியது.
அமெரிக்க அரசின் காட்டுயிர் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த ரேச்சல், 1952-ல் அரசுப் பணியில் இருந்து வெளியேறினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1962-ல் அவர் எழுதிய மௌன வசந்தம் நூல் வெளியானது. சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்ததாக, இந்தப் புத்தகம் குறிப்பிடப்படுகிறது.
ஒன்றையொன்று சார்ந்து வாழும் நமது உயிர்க்கோளத்தில் வேதிப் பொருள்கள் எப்படி நமது நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி, பின்விளைவுகளை உருவாக்கு கின்றன என்று மௌன வசந்தம் ஆதாரங்களுடன் விளக்கி இருந்தது.
இன்றைக்கு நகர்ப்புறங் களில் சிட்டுக்குருவிகளின் எண் ணிக்கை குறைந்துவிட்டது பற்றிப் பேசுகிறோம். அன்றைக்கு டி.டி.டி. பூச்சிக் கொல்லி ஏற்படுத்திய பாதிப்பால், ராபின் பறவைகள் அழிந்ததை ரேச்சல் சுட்டிக்காட்டியிருந்தார்.
இப்படி அந்த நூலில் மறுக்கமுடியாத ஆதாரங்களுடன் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான தனது வாதத்தை அவர் முன்வைத்திருந்தார். அவரது கண்டறிதல்களும், சாட்சியங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்விளைவுகளை ஆதாரத்துடன் விளக்கி, அது ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளை அம்பலப்படுத்தின.
ரேச்சல் உயிரியலாளராக இருந்தது மட்டுமில்லாமல், அற்புதமான எழுத்துத் திறனையும் பெற்றிருந்தார். இந்த அம்சங்கள்தான் உலகின் போக்கில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்திய மௌன வசந்தம் நூலை அவர் எழுதக் காரணமாக இருந்தன.
மௌன வசந்தம் புத்தகத்தை எழுதிக்கொண் டிருந்த காலத்திலேயே ரேச்சலுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் புத்தகத்தை இறுதி செய்துகொண்டிருந்த நேரத்தில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிராகப் போராடிக் கொண்டி ருந்த அவர், கடைசியில் அதன் காரணமாக உருவான புற்றுநோயாலேயே 1964இல் (57 வயதில்) மரித்துவிட்டார்.

No comments:

Post a Comment