Friday 25 April 2014

தமிழகத்தில் 73% வாக்குப்பதிவு

தமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967க்குப் பிறகு 46 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவாகும். இது எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாகவே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்களைக் காட்டிலும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகிய இரண்டிலுமே வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பிரிக்கப்படாத சென்னை மாகாணமாக இருந்தபோது 57.89 சதவீத வாக்குகள் பதிவாகின. மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு 1957-ல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவான 47.71 சதவீத வாக்குகளே பதிவாகின.
அதன்பிறகு, 1967-ல் நடந்த தேர்தலில்தான் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்ச அளவான 76.59 சதவீத வாக்கு பதிவானது. அப்போது காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும், திமுக, சுதந்திரா கட்சிகள் அதிக இடங்களில் வென்றன. எனினும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
2009 தேர்தலில் 72.98 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது.
தற்போது 46 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக தருமபுரியில் 80.99 சதவீதமும், தென் சென்னையில் குறைந்தபட்சமாக 59.86 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுக்கு முன்பு கருத்து கூறவிரும்பவில்லை: ஜெயலலிதா
தேர்தல் முடிவு வரும் வரை எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை காலை 9.05 மணியளவில் வாக்களித்தார். தோழி சசிகலாவும் உடன் வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறும்போது, ‘‘நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடியும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். முடிவு வரும் வரை வேறு எதுவும் கூற விரும்பவில்லை’’ என்றார்.
முடிவுகள் திமுக அணிக்கு சாதகமாக இருக்கும்: கருணாநிதி
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் திமுக அணிக்கு சாதகமாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் தனது வீட்டின் அருகேயுள்ள சாரதா மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை 10.40 மணியளவில் கருணாநிதி வாக்களித்தார். பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கருணாநிதி, “இந்தத் தேர்தல் திமுக அணிக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை திமுக பெறுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நிச்சயம் பெறுவோம்” என்றார் அவர்.
“அதிமுக பணத்தில் புரள்கிற கட்சி. அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுத்ததாக இதுவரை தெரியவில்லை” என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment