Tuesday 22 April 2014

‘சுயமாக சிந்தித்து வாக்களிப்போம்’: முதல்முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் கருத்து

குடும்பத்தில் பெரியவர்கள் கூறும் அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல் தங்களுடைய சுயசிந்தனைப்படி வாக்களிக்கப் போவதாக முதன்முறையாக ஒட்டு போடும் சில இளைஞர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் 24-ம் தேதி நடக்கிறது. தமிழக மக்கள்தொகை 7.21 கோடி. இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 50 லட்சத்து 39 ஆயிரத்து 903. மக்கள் தொகையில் 18-19 வயது பூர்த்தி செய்த இளைஞர்கள் எண்ணிக்கை என்பது 25 லட்சம். அதில் 12 லட்சம் இளைஞர்கள் மட்டும்தான் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல்முறை ஓட்டளிப்பவர் களின் குரல்
சென்னை பச்சையப்பன் கல்லூரி பி.காம் மாணவர் வீரா:
வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தபோது எனக்கும் ஒரு உரிமை கிடைத்துள்ளது என்று தோன்றியது. விலைவாசியைக் குறைக்கிற, மக்களுக்கு நல்லது செய்கிற கட்சிக்குத்தான் என் ஓட்டு.
மனிதவளத் துறை மாணவி மோனிஷா:
நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்குக் கிடைத்துள்ளது. மிகவும் பெருமையாக உள்ளது. தவறான தலைவரை தேர்ந்தெடுத்தால் மக்கள்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிரமப்பட வேண்டும். ஊழலை ஒழித்து மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சிக்குதான் என் முதல் ஓட்டு.
பி. எஸ்சி. கணிதம் மாணவர் வம்சி கிருஷ்ணன்:
நாட்டை ஆளும் கட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயி கள், ஏழைகளுக்குக் கல்வி வழங்கும் கட்சிக்குதான் ஓட்டு போடுவேன்.
மாணவி பெனாசீர்:
எல்லா கட்சிகளும் மீடியாவை பயன்படுத்தி ஒருவர் மீது ஒருவர் தவறுகளைத்தான் ஒளிபரப்புகின்றனர். ஏன் தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நல்ல விஷயங்களைக் கூறும் அரசியல் கட்சிகள் இல்லை. செல்போனில் அரசியல் கட்சிகள் குறுந்தகவல் (msg) அனுப்பி எங்களுக்கு ஓட்டு போடுங்க என்ற msg 12 பேருக்கு அனுப்பினா உங்களுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்வோம்கிறாங்க. என்னைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் இது போன்ற விஷயங்கள் தடுக்கின்றன.
மாணவர் கிஷோர் குமார்:
என் மனம் கவர்ந்த கட்சிக்குத்தான் என் முதல் ஓட்டு. ஓட்டுரிமையை எக்காரணம் கொண்டும் தவறாகப் பயன்படுத்த மாட்டேன்.
மாணவர் சவுந்தரராஜன்:
அரசியல் கட்சிகள் ஊழல் செய்தாலும் மக்களுக்கான சேவைகளைச் செய்ய வேண்டும். எந்தக் கட்சியும் அப்படிச் செய்வதில்லை. எனவே, சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளேன்.
மாணவர் பரந்தாமன் :
ஊழலை ஒழித்து மக்களுக்குச் சேவை செய்யும் கட்சிக்கு என் முதல் ஓட்டு.
அரசு கல்லூரி பி.காம். மாணவர் கவுதம்:
ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் சேவை செய்யும் கட்சிக்கே என் வாக்கு. நான் வாக்கு அளிக்கும் தலைவர் நாட்டுக்கு நல்லது செய்பவராக இருக்க வேண்டும்.
‘‘மாற்றத்தை ஏற்படுத்த வாக்களிக்க வேண்டும்’’ என்று 1951-ம் ஆண்டில் இருந்து, தற்போது நடைபெற்று வரும் 16- வது மக்களவை தேர்தல் வரை வாக்களித்த காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 97 வயதான ஷியாம் சரண் நேகியின் வார்த்தைகள் இன்றைய முதல் முறை வாக்காளர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment