Monday 21 April 2014

புதிய வாக்காளர்கள்: ஊழலை ஒழிக்க வாக்களிப்போம்!

எப்போதும் இல்லாத அளவுக்கு, மக்களவைத் தேர்தலில் இந்த முறை 15 கோடி முதல்முறை வாக்காளர்கள் பங்கேற்கிறார்கள். நாட்டின் வாக்காளர்களில் கிட்டத்தட்ட பத்து சதவீதம் பேர் முதல்முறை வாக்காளர்கள். இந்த 16-ம் மக்களவைத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முதல்முறை வாக்காளர்கள் பெரிய பங்காற்ற இருக்கிறார்கள்.
தமிழ்நாடு, மக்களவைத் தேர்தலை இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து கிட்டத்தட்ட 62 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள். முதல்முறை வாக்களிப்பதைப் பற்றிய உற்சாகமும் பொறுப்புணர்வும் அவர்கள் கருத்துகளில் எதிரொலிக்கின்றன.
விக்னேஷ்வரி, இரண்டாம் ஆண்டு பி.காம். மாணவி, “முதல்முறையாக வாக்களிப்பது உற்சாகம் அளிப்பதோடு, ஏதோ ஒரு பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும் உணர்கிறேன். அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது” என்கிறார். வேட்பாளரின் சாதனைகளைப் பார்த்துதான் வாக்களிப்பேன் என்று கூறும் இவர், மத்தியில் அமையப்போகும் அரசு, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நலத் திட்டங்களை ஊழல் இல்லாமல் சரியாகச் செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும் என்கிறார்.
வலிமையான கொள்கைகளை முன்வைக்கும் கட்சிக்குத் தான் வாக்களிக்கப் போவதாகக் கூறும் விவேக், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். “ஊழல் எதிர்ப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவற்றை அமையவிருக்கும் புதிய அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்கிறார்.
வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை முதல்முறை வாக்காளர்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். அதற்குக் காரணமாக, தேர்தல் ஆணையம், வாக்களிப்பதைப் பற்றிய பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மாணவர்களை வைத்தே நடத்தியதைக் கூறலாம்.
“ஊழலை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சிக்கே நான் வாக்களிப்பேன். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகள், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்றவற்றை வரவிருக்கும் அரசு உடனடியாகச் செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும்” என்கிறார் முதலாம் ஆண்டு இயற்பியல் மாணவர் தாமோதரன்.
இவர்கள் கருத்துகளில் இருந்து மாறுபட்டு, மூன்றாம் ஆண்டு விஷுவல் ஆர்ட்ஸ் மாணவி ஹர்ஷா, “என் ஒரு வாக்கு அரசியலில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் என் சமூகப் பங்களிப்பைச் சிறிய அளவில் ஒரு நல்லாட்சியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் செய்கிறேன் என்ற உணர்வை முதல்முறை வாக்களிக்கப் போவது அளிக்கிறது” என்கிறார்.
இந்த முதல்முறை வாக்காளர்கள் அனைவரின் கருத்துகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. இவர்கள் அனைவருமே வாக்களிப்பதில் ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப் போவதைக் கூறியிருக்கிறார்கள். நம் நாட்டில் பல பூதாகரமான ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன. நடைபெற்றும் வருகின்றன. அந்த ஊழல்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் ஊழல் முற்றிலும் ஒழிந்த சமூகத்தை நம்மால் உருவாக்க முடியவில்லை. அந்த ஏக்கம் இந்த முதல்முறை வாக்காளர்களின் குரல்களில் எதிரொலிக்கிறது.

No comments:

Post a Comment