Friday 28 March 2014

வறுமைக் கோட்டை அளவிடுவது எப்படி?

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களை எந்த அளவுகோல் மூலம் கணக்கிடுவது என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை மத்தியில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசிடம் அளிக்கும் என்று தெரிகிறது.
பொருளாதார நிபுணர் சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான குழு வறுமைக் கோட்டை அளவிடுவது தொடர்பான அறிக்கையை
2012-ம் ஆண்டு அளித்தது. இதன்படி நகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ. 28.60-ம் கிராமப்புறத்தில்
ரூ. 22.40 ம் செலவிடுவோர் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என கணக்கிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை கடுமையான விமர்சனத் துக்கு உள்ளானது.
இதைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டில் மத்திய அரசு சி. ரங்கராஜன் தலைமையில் 5 பேரடங்கிய குழுவை நியமித்தது. இக்குழுவில் இந்திரா காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் மகேந்திர தேவ், தில்லி பொருளாதார கல்வி மையத்தின் முன்னாள் பேராசிரியர் கே. சுந்தரம், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தைச் சேர்ந்த மகேஷ் வியாஸ், மத்திய திட்டக் குழுவின் முன்னாள் ஆலோசகர் கே.எல். தத்தா ஆகியோர் உள்ளனர்.
அறிக்கை முழுவதுமாக தயாராகிவிட்டது. இருப்பினும் இன்னும் 6 மாதம் தேவைப்படும். அப்போதுதான் புள்ளியியல் துறை வெளியிடும் நுகர்வோர் செலவின அட்டவணை அடிப்படையில் தகவல்களை திரட்டி அறிக்கை தயாரிக்க முடியும் என்று ரங்கராஜன் கூறினார்.
சுரேஷ் டெண்டுல்கர் வகுத்தளித்த பார்முலாவின்படி 68-வது சுற்று நுகர்வோர் செலவின அடிப்படையில் நாட்டின் ஏழை மக்கள் விகிதம் 2011-12-ம் ஆண்டில் 22 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த அளவு 2009-10-ம் ஆண்டில் 29.8 சதவீதமாக இருந்தது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 16-ம் தேதி வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதிக்குள் புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்கும்.
ரங்கராஜன் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த காலத்திற்குள் அறிக்கை தயாரிப்பது சிரமமான விஷயம் என்று ரங்கராஜன் தெரிவித்தார்.
இக்குழுவினருக்கு உள்ள மிகப் பெரிய சவாலே ஏற்கெனவே உள்ள அட்டவணையை ஒப்பிட்டு கணக்கீடு தயாரிக்க வேண்டும் என்பதுதான்.
பொருள் நுகர்வு அடிப்படையில் வறுமைக் கோட்டை கணக்கிட வேண்டும் என்பதுதான் ரங்கராஜன் குழுவின் பரிந்துரையாகும். இதன்படி கணக்கிட்டால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள்தொகை டெண்டுல்கர் குழு தெரிவித்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பொருள் நுகர்வு அடிப்படையில் வறுமைக் கோட்டை கணக்கிடுவதற்கு மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிடும் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அட்டவணையை ஆதாரமாக பயன்படுத்தலாம் என்று ரங்கராஜன் குழு தெரிவித்துள்ளது.
தேசிய புள்ளியியல் மையம் வெளியிடும் அட்டவணை அடிப்படையில் வறுமைக் கோட்டைக் கணக்கிடுவது மற்றும் தேசிய கணக்கியல் துறை பரிந்துரைத்த வழிகாட்டுதல்படி கணக்கிடுவது உள்ளிட்ட இரு முறைகளையும் ரங்கராஜன் குழு பரிசீலித்து வருகிறது.

No comments:

Post a Comment