Wednesday 26 March 2014

பணி நிரந்தரம் இனி சாத்தியமில்லையா?

அரைக்காசு உத்யோகம்னாலும் அரசாங்க உத்யோகம் வேணும் என்பார்கள். கடைசி வரை சம்பளம், பென்ஷன் உண்டு. வாழ்க்கை நிரந்தரமானது. அந்த குடும்பம் என்றும் வருமானம் இல்லாமல் போகாது.
தனியார் நிறுவனங்கள் கோலோச்ச ஆரம்பிக்கும் வரை அரசாங்க வேலை என்பதுதான் திருமண சந்தையில் முதல் சாய்ஸாக இருந்தது.
தொண்ணூறுகளின் மத்தியில் சரசரவென்று வெளிநாட்டு கம்பெனிகள் எல்லாத்துறையிலும் நுழைய அந்த ஆரம்ப சம்பளமும் பகட்டும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர் ஐ.டி. என்கிற சுனாமி வந்து வர்க்க பேதம் இல்லாமல் வந்தார் அனைவரையும் தூக்கிவிட்டது.
“ஏதோ பிரவேட்ல இருக்கான்!” என்று அடையாளம் தெரியாமல் சொல்லி வந்தவர்களை, “ பிள்ளை டி.சி.எஸ். பொண்ணு சி.டி.எஸ். கல்யாணத்துக்கு அப்புறம் இரண்டு பேரும் அமெரிக்கா போய்விடுவார்கள்” என்று பெருமை கொள்ள வைத்தது.
டாட்காம் குமிழ்
2000-ம் ஆண்டில் டாட் காம் என்கிற நீர்க்குமிழி வெடித்தபோது முதல் முறையாக பல ஐ.டி பணியாளர்கள் வேலை இழந்தார்கள். பல கம்பெனிகள் காணாமல் போய்விட்டன. அப்போது நிரந்தர பணி கொண்டோர், “இதுக்கு தான் நம்மள மாதிரி வேலைல இருக்கறது எவ்வளவோ தேவலை. இப்படி திடீர்னு ரோட்ல நிக்க வேண்டாம்” என்றனர்.
அப்போது நான் எழுதிய கட்டுரைகளில் இரண்டு வார்த்தைகளை வேறுபடுத்தி நிறைய எழுதினேன்: Employment and Employability.
வேலையை ஒரே முறை வாங்கும் திறனும், வேலையில் தொடர அதே வேலையை தொடந்து வேறு இடங்களில் வாங்கும் திறனும் வேறு வேறு என்று விளக்குவேன். அந்த நிறுவனத்தில் உங்கள் வேலை போனாலும் அதே போன்ற வேலையை பெற உங்களிடம் திறன்கள் வேண்டும் என்று வலியுறுத்துவேன். ஒரு முறை வேலையில் சேர்ந்தால் இஞ்சினைத் தொடரும் ரயில் பெட்டிபோல என்று இருந்த வாழ்க்கை இனி சிரமம் என்ற கருத்தை தொடர்ந்து சொல்லி வந்தேன்.
இன்று யோசிக்கையில் இந்த உண்மை கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கே தெரிகிறது. அதனால்தான் முதல் வருடமே ஃப்ளாட் வாங்க ஈ.எம்.ஐ விசாரிக்கிறான். வேலையில் பென்ச்சில் உட்கார்வது, இடையில் வேலை யில்லாமல் போவது, இடையில் படிக்கப் போவது இவையெல்லாம் சகஜம் என்பதால், பணம் வருகையில் சீக்கிரம் சம்பாதித்து வைத்துவிட்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்று துடிக் கிறான்.
அன்று என்னிடம் தன் பிஸினஸ் பிளான் காட்டி அபிப்பிராயம் கேட்க வந்த 23 வயது பையன் தெளிவாகச் சொன்னான்: “3 வருடம் கம்பெனியை வெற்றிகரமாக நடத்திட்டு அதை அப்படியே வித்திட்டு அந்த பணத்துல செட்டில் ஆயிடணும் சார். அப்புறம் வேலைக்கே போகக் கூடாது. வீடு, கார், பண்ணைன்னு உட்காரணும்!”
மொத்தத்தில் பணி நிரந்தரம் என்பதை நிறுவனங்களும் அளிப்பதில்லை. பணியாளர்களும் கோருவதில்லை.
அமைப்பு சாரா பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் என்றுமே கிடையாது. நம் தேசத்தில் 90%க்கு மேல் அமைப்பு சாரா தொழிலாளிகள்தான் நிரம்பியுள்ளனர்.
அமைப்பு சார்ந்த தொழில்களிலும் தொழிற்சங்கம் கைபடாத எல்லா பணியாளர்களுக்கும் (எல்லா நிலையிலும்) பணி நிரந்தரம் பற்றி பேச்சே கிடையாது. அதனால் நிரந்தர பணியாளர்களை குறைத்து ஒப்பந்த பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் வழக்கம் இங்கு வேரூன்றி விட்டது. எல்லாவற்றையும் மீறி, பணி நிரந்தரம் தரும் அரசாங்கப் பணிகள் மத்திய வர்க்க மக்களிடம் கவர்ச்சி இழந்து வருகின்றன.
எது நிரந்தரம்?
நல்ல சம்பளமும் வளர்ச்சியும் இருந்தால் போதும்; பணி நிரந்தரம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்கிற எண்ணம்தான் இளைஞர்கள் மனதில். இளமைக் காலத்தில் நன்கு சம்பாதித்து விட்டு, பின் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்பது தனியார் துறையில் உள்ள ஒரு Creamy Layerக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் பிரமிட் போன்ற வடிவத்தில் உள்ள நிறுவனத்தில் பெரும் பகுதி கீழும் மத்தியிலும் தான் உள்ளது. அவர்களின் நிலை என்ன?
ஒரு தனியார் கல்லூரி ஆசிரியர் சொல்கிறார்: “பாடம் நடத்துவது, கோச்சிங் கிளாஸ், பரிட்சைகள் தவிர, மாணவர் விடுதி, போக்குவரத்து வசதிகள், புதிய கட்டட கட்டமைப்பில் மேற்பார்வை என ஏதேதோ செய்யச் சொல்கிறார்கள். நூலகத்திற்கு நான் சென்றே நாளாயிற்று. மாணவர்களின் ரிசல்டும் அட்மிஷனும் தான் நிர்வாகத்தின் நோக்கங்கள். எதையும் கேட்க முடியாது. காரணம் இந்த சம்பளம் எங்கும் கிடைக்காது. ஆனால் நிரந்தரமில்லாத வேலை!”
பணியா? சேவையா?
10 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஒரே ஷிஃப்டில் பணியாற்றும் செவிலியர் பலரைப் பார்த்திருக்கிறேன். 5 வருடங்களில் 1,000 ரூபாய் கூட சம்பள உயர்வு பெறாத பல வெள்ளை சட்டை பணியாளர்களை எனக்குத் தெரியும்.
பி.எஃப். போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பணியாளர்களுக்கு வருடக் கணக்காக கன்சாலிடேட்டட் சம்பளம் வழங்கும் பல நிறுவனங்கள் இங்கு உள்ளன. ஒரு நாள் அறிவிப்பு கூட இல்லாமல் பணி நீக்கம் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. பணியாளர் மன நலத்திற்கும் பங்களிப்பி ற்கும் பணியில் ஒரு நிரந்தரத் தன்மை அவசியப் படுகிறது என்பது உளவியல் உண்மை.
வாடிக்கையாளர் தரும் வியாபாரங்கள் மாறி வரும் சூழ்நிலையில் பணியாளர் களை திட்ட மிட்டு எடுத்து நெடுநாள் பணியில் அமர்த் துவது இனி சிரமம்தான்.
பொறுப்பின்மையா?
தவிர பணி நிரந்தரம் பொறுப் பின்மையை ஏற்படுத்தி, வேலை தீவிரத்தை குறைத்துவிடும் என்கிற எண்ணம் இன்று எல்லா தரப்பிலும் உள்ளது. இந்த எண்ணம் வலுப்பெற நம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் அவர்கள் வாடிக்கையாளர்களை நடத்தும் விதம்தான் பெரும் காரணம் என்று சொல்வேன். வேலையும் நிரந்தரமில்லை; பணியாளரும் நிரந்தரமில்லை என்ற நிலைதான் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டு வருகிறது. இன்று கிராஜுவிட்டி பற்றியெல்லாம் எந்த இண்டர்வியூவிலும் பேசுவது கூட கிடையாது.
ஆனால் இந்த காரணங்கள் நிர்வாகங்கள் தங்களுக்கு சாதமாக்கி பணியாளர் உழைப்பை சுரண்டுதலுக்கும், கண்ணியம் குறைவாக நடத்துதலுக்கும், பாதுகாப்பற்ற கலவர நிலையிலேயே வைத்திருப்பதற்கும் வழி வகுக்கக்கூடாது.
அப்படி ஏற்பட்டால், அது அவர் களிடமிருந்து முழு மனதான பங்களிப்பை கொண்டு வர உதவாது.
Compensation என்ற ஆங்கில சொல்லுக்கு நஷ்ட ஈடு என்றும் பொருள். சம்பளம் என்றும் பொருள். வேலைக்காக உடல், மன, சமூக ரீதியாக பணியாளர்கள் ஏற்கும் நஷ்டத்திற்கு நிறுவனம் வழங்கும் ஈடு தான் சம்பளம் என்பதை மறந்து விட வேண்டாம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment