‘காசநோய்க்கான புதிய மருந்துகளின் தேவை’ என்ற தலைப்பில் காச நோய் விழிப்புணர்வு குறித்து அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், மருந்து கண்டுபிடிப்புக்கான திறந்தவெளி ஆதாரம் மற்றும் விஞ்ஞான் பிரசார் ஆகியவை இணைந்து 2013-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் நடத்திய குறும்படப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற ‘முற்றுப்புள்ளி’ என்னும் குறும்படத்தின் எழுத்து வடிவம் இது.
விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியில் உலகம் ஏவுகணை வேகத்தில் முன்னேறுகிறது. கணினி, அலைபேசி, வலைத்தளம் என்ற நவீன கண்டெடுப்புக்கள். நிலவில் குடியேற எத்தனிக்கும் காலமிது. உலக அரங்கில் வல்லரசுக் கனவுகளோடு வீறு நடைபோடும் நம் இந்தியாவின் இதயத்திலிருந்து எழும் குரல் ஓயாத இருமலாக ஒலிக்கிறது. கொல் கொல் எனக் கொல்லுகிறது காசநோய்!
இது ஆதிகாலம் தொட்டே மனிதனைத் தொட்ட நோய். நுரையீரலை மையம் கொண்டாலும் உடலின் பல பாகங்களையும் பற்றிப் படர்ந்து ஆட்டிப்படைக்கும் நோய்தான் ‘டிபி’ என அழைக்கப்படும் காசநோய். காசநோய் தாக்கி ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு இந்தியாவில் இரண்டு பேர் இறக்கின்றனர்.
இந்த நோய்க்கு எதிராக 1962 முதல் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. மருத்துவ உலகம் அள்ளிக் கொட்டிய மாத்திரைகளின் துணையோடு டிபியை ஒழிக்க போராடிக்கொண்டிருக்கிறோம். நோய் தாக்குதலுக்குள்ளானவர்கள் ஆரம்பக் காலங்களில் சானடோரியம் என்றழைக்கப்படும் மருத்துவக் காப்பகங்களில் தங்கி சிகிச்சை பெற்றனர்.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஆசாரிபள்ளம் காசநோயாளிகளின் சரணாலயமாய்த் திகழ்ந்தது ஒருகாலம். 1992 முதல் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறத்தேவையில்லை வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறலாம் என்ற நிலை மாறியது. வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இருப்பினும் நோய் தீர்ந்தபாடில்லை. முற்றாய் இதை ஒழிக்க முடியாமல் போனதற்கு சில காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. அதன்படி, மருந்துகளை நோயாளிகளிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல். வாரத்திற்கு மூன்று நாள்தான் மருந்து எடுத்துக்கொள்ளப்பட்டாலும் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரையிலான நீண்ட கால சிகிச்சை முறை ஆகியவை சற்று தேக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதுதவிர காசநோய் மருந்துகளுக்கு எதிரான கிருமிகளின் படையெடுப்புகளாலும் நோயை முற்றாக ஒழிப்பதில் சிக்கல் நிலவுகிறது.
பல மருந்துகளின் பக்கவிளைவுகள் மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சுமைதாங்கியே சுமையாகிப்போனால் என்னாவது...? எய்ட்ஸ் நோயாளிகளில் பலர் காசநோயினால் எளிதாகப் பாதிப்படைகின்றனர்.
மருந்துகளைக் குறைந்த காலத்தில் உட்கொள்ளும்படியான குறைவான அதேநேரம் வீரியமிக்க மருந்துகளைத் தயாரிக்க வேண்டும். கிருமிகளுக்கு எதிரான உறுதியான புதுமருந்து இன்றைய அவசரத் தேவையாக உள்ளது.
வந்த நோயை விரட்ட ஒருபுறம் முயற்சி செய்வதுபோல் வராமல் தடுக்கவும் நாம் ஒவ்வொருவரும் முயலவேண்டும். புகைப்பிடிப்பதால் புண்ணாகும் நுரையீரலால் காசநோய் எளிதில் தொற்றும். ஆகவே புகைபிடிக்க வேண்டாம். கண்ட இடங்களில் எச்சில் துப்புவதும் வியாதிக்கு வழிவகுக்கும்.
நோயற்ற மக்களால்தான் ஆரோக்கியமான தேசம் சாத்தியமாகும். எல்லோருமாய் ஒன்றிணைந்து விழிப்புணர்வோடு போராடுவதன் மூலம் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.