Saturday 22 March 2014

சாமானியர்களின் முகங்கள்

கற்கால மனிதன் கரித் துண்டுகளைக்கொண்டு, விலங்குகளின் எலும்புகளைக் கொண்டு தான் பார்த்ததில், தன்னைப் பாதித்த காட்சிகளை குகைகளுக்குள் ஓவியமாகத் தீட்டினான். மனிதன் முதன்முதலில் கைக்கொண்ட கலை வடிவம், ஓவியம்தான் எனலாம். மொழி பிறப்பதற்கு முன்பே இந்த வடிவம் தோன்றியிருக்கக்கூடும். தொடக்கத்தில் கோடுகளால் வரையப்பட்ட இந்தக் கலை வடிவம், பல்வேறு வடிவங்களாக முன்னேற்றம் கண்டுள்ளது.
இன்று கொண்டாடப்படும் ஆயில் பெயிண்டிங் போன்ற நவீன ஓவியத்தின் பிறப்பிடம் ஐரோப்பாதான். குறிப்பாக நெதர்லாந்து இக்கலையில் சிறந்து விளங்கியுள்ளது. உலகின் புகழ்பெற்ற ஓவியர்களுள் பலரும் டச்சுப் பின்னணி உடையவர்களாக இருந்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் வின்சென்ட் வான்கா. இவரது ‘The starry night' ‘Almond Blossoms' போன்ற பல ஓவியங்கள் இன்றும் ஓவிய ரசிகர்களுக்கு வியப்பூட்டிக்கொண்டிருப்பவை.
வான்காவின் முதல் ஓவியமாகக் கருதப்படுவது அவரது ‘The Potato Eaters (உருளைக் கிழங்கு சாப்பிடுபவர்கள்)’. இது 1885ஆம் ஆண்டு வரையப்பட்டது. இந்த ஓவியம் உருளைக் கிழங்கைச் சாப்பிடும் எளிய விவசாயிகளைச் சித்தரிக்கிறது. அதுவரை ஓவியங்களில் சித்தரிக்கப்பட்ட முகங்களுக்கு மாற்றான மனித முகங்களைச் சித்தரிக்கவே வான்கா விரும்பினார். பொதுவாகப் பார்ப்பதற்கு ‘அழகற்ற’ முகங்கொண்ட எளிய மனிதர்களிடம் உள்ள இயல்பான அழகை அவரால் சித்தரிக்கவும் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த ஓவியம் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை. இன்று உலகின் தலைசிறந்த ஓவியங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் இந்த ஓவியம் அன்று பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.
இந்த ஓவியத்தில் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் சித்தரிக்கப்பட்டுள்ளது; மூதாட்டி ஒருத்தி, ஒரு பெண், ஒரு ஆண், இளம் பெண், ஒரு சிறுமி. ஐந்து பேரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்கிறார்கள். உணவான உருளைக் கிழங்குத் துண்டுகள் அரையிருளில் இருக்கின்றன. அவர்கள் அனைவரின் கைகளும் உழைப்பால் இறுகிப்போய் உள்ளன. ஒளியில் தெரியும் அவர்களது பாதி முகங்களில் எண்ணற்ற உணர்ச்சிகள். மீதிப் பாதி முகங்கள் இருளில். நின்றபடி இருக்கும் சிறுமியின் முதுகுப் பக்கத்தையும் இருள் போர்த்தியுள்ளது. ஜன்னல், விட்டம், சுவரில் தொங்கும் படமும், கடிகாரமும் எல்லாமும் இருளால் மூடப்பட்டுள்ளன. அவர்கள் அமர்ந்திருக்கும் அறை எங்கும் இருள் நிறைந்து கிடக்கிறது. அவர்களின் தலைக்கு மேலே உள்ள எண்ணெய் விளக்கின் சிறிய வெளிச்சம் மட்டும் அந்த அறையில் கசிந்து கொண்டிருக்கிறது.
அந்த அறையில் இருந்த விலக்க முடியாத இருட்டை சாசுவதமாக மாற்றிவிட்டார் வான்கா.

No comments:

Post a Comment