Friday 21 March 2014

மனித உரிமைகள் குறித்த நிலைப்பாடு என்ன?- பிரதமர் வேட்பாளர்களுக்கு அம்னஸ்டி கடிதம்

 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட இந்திய பிரதமர் வேட்பாளர்கள் தங்கள் நிலைபாட்டை அறிவிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபையின் (அம்னஸ்டி இண்டர்நேஷனல்) இந்தியக் கிளை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் திட்ட இயக்குநர் சசிகுமார் வெலாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்கள் அமைப்பு ‘2014-க்கு 2014’ என்ற இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறது. அதில் வேட்பாளர்கள் காவல் துறை சீர்திருத்தங்கள், விசாரணைக் கைதிகள், ராணுவப் படையினருக்கு விதிவிலக்கு, நிலம் கையகப்படுத்துதல், பேச்சுரிமை போன்ற பிரச்சினைகளில் தங்களது நிலையை தெரிவிக்க வேண்டும் என்று மக்களவை தேர்தலின் பிரதமர் வேட்பாளர்களிடம் கேட்டிருக்கிறோம்.
நாங்கள் அணுகியுள்ள தலைவர்களில் ராகுல்காந்தி, நரேந்திர மோடி, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், அரவிந்த் கேஜ்ரிவால், மாயாவதி ஆகியோரும் அடங்குவர். தேர்தலின்போது பல நேரங்களில் மனித உரிமைகள் ஏதோ சாதாரணப் பிரச்சினையாக கருதப்படுவதால் தாங்கள் அதை முன்னிறுத்துவதாகவும், 2014-க்கு 2014 மனித உரிமைகள் பிரகடனத்தை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.
அதில் வணிகம் மற்றும் மனித உரிமைகள், குற்றவியல் நீதிமுறையில் சீர்திருத்தங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை, மரண தண்டனை, இடம்பெயரும் தொழிலாளர்களின் உரிமைகள் போன்ற பிரச்சனைகளும் இடம் பெற்றுள்ளன என்று அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதங்களுக்கு இதுவரையும் எந்த தலைவரிடம் இருந்தும் பதில் வரவில்லை.
அம்னஸ்டி அணுகியுள்ள தலைவர்களில் ராகுல், மோடி, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், அரவிந்த் கேஜ்ரிவால், மாயாவதி ஆகியோரும் அடங்குவர்.

No comments:

Post a Comment