Tuesday, 1 October 2013

நோட்டா என்ற தோட்டா


10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள் அயராமல் போராடியதற்கான வெற்றி இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பாகக் கிடைத்திருக்கிறது. எல்லா வேட்பாளர்களையும் நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு; அதை ரகசியமாகத் தெரிவிக்கும் வசதியும் அவர்கள் உரிமை என்று தெளிவாகச் சொல்லிவிட்டது நீதிமன்றம்.
இதை வர விடாமல், அரசு மட்டத்திலும் நீதிமன்றத்திலும் இழுத்தடித்த கட்சிகள் எல்லாம் இப்போது இதை வரவேற்பதாகப் பாவனை செய்கின்றன. முன்னர் வேட்பாளர்கள் சொத்துக் கணக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியைத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்தபோது, எல்லாக் கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால், அந்த விதியும் உச்ச நீதிமன்ற உத்தரவால்தான் நடைமுறைக்கு வந்தது.

முன்பு சமூக ஆர்வலர்கள் ‘49 ஓ’என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுவந்த நிராகரிக்கும் உரிமைக்கு இப்போது நீதிமன்ற உத்தரவின் பின் புதுப் பெயர் ‘நோட்டா’. மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியல் வரிசையில் கடைசியாக ‘மேற்கண்ட யாரும் இல்லை’(நன் ஆஃப் தி அபவ்) என்ற வரியும் அதற்கான பொத்தானும் இடம்பெறப்போகின்றன. அதன் சுருக்கமே ‘நோட்டா’. அதாவது, சுருக்கமாகச் சொன்னால் என்னிடம் நோட்டை நீட்டி, என் ஓட்டை வாங்க முயற்சிக்கும் வேட்பாளர்களுக்கெல்லாம் நான் ‘நோட்டா’போடலாம். ஆக, ‘நோட்டா’மக்கள் கையில் கிட்டியிருக்கும் தோட்டா.

இந்தப் புதிய உத்தரவால் என்ன பயன்? ‘‘தேர்தல் ஜனநாயகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா?’’ என்று சிலர் கேட்கிறார்கள். எல்லா நோய்க்குமான ஒற்றை மருந்து உலகில் எங்கும் கிடையாது. ஒவ்வொரு மருந்தும் ஒரு சில நோய்களைத் தீர்க்க உதவும். அப்படித்தான் இதுவும்.

முதல் விஷயம், இனி இந்த நிராகரிப்பு ஓட்டுகள் கணக்கில் வரும். ‘49 ஓ’-வின் கீழ் போட்ட ஓட்டுகள் எல்லாம் மொத்தமாக செல்லத்தக்க ஓட்டுகள் பட்டியலிலேயே சேராதவை. ஆனால், இப்போது நீதிமன்றம் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களின் அடிப்படை உரிமை என்று சொல்லியிருப்பதால், அந்த ஒட்டுகளை எண்ணி செல்லத் தக்கவையாகக் கருதாவிட்டால், உரிமை முழுமை அடையாது. அப்படி எண்ணியதில் நிராகரித்தோரின் வாக்கு எண்ணிக்கை எல்லா வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளுக்கும் சமமாகவோ அதிகமாகவோ வந்துவிட்டால், வேட்பாளர்களில் அதிக வாக்கு பெற்றவரைவிட இந்த வாக்கல்லவா அதிகமாக இருக்கும். அவரை ஜெயித்தார் என்று அறிவிப்பார்களா, மாட்டார்களா, தேர்தல் செல்லாது என மறு தேர்தலுக்கு உத்தரவிடுவார்களா? இந்த விஷயங்களைப் பற்றி நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள்.

நீதிமன்றம் ஊகங்களின் அடிப்படையில் எதையும் சொல்ல முடியாது. எனவே, சொல்லாதது சரி. சட்டச் சிக்கல் வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும். ஆனால், அப்படிப்பட்ட சட்டச் சிக்கல் வர வேண்டும் என்றுதான் என்னைப் போன்ற ஆர்வலர்கள் விரும்புகிறோம். அப்போதுதான் இது அடுத்த கட்டத்துக்கு நகரும்.
அப்போது என்ன செய்ய வேண்டும்? நிராகரிப்பு ஓட்டுகள் இதர வேட்பாளர்களின் ஓட்டுகளைவிட அதிகமாக இருந்தால், மறு தேர்தலுக்குத்தான் உத்தரவிட வேண்டும். அந்தத் தேர்தலில், முந்தைய நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் மறுபடியும் நிற்கத் தகுதி இல்லை. அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள்.

இதைச் செய்யச் சட்டத் திருத்தம் தேவையெனச் சில ஆர்வலர்கள் கருதுகிறார்கள். நான் அப்படிக் கருதவில்லை. தேர்தல் ஆணையம் தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் இப்போதே இந்த விதிகளை அறிவித்துவிடலாம் என்பது என் கருத்து. ஏனென்றால், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், வெற்றி - தோல்விகளை அறிவிக்கும் முழு உரிமை ஆணையத்துடையதுதான். முடிவை அறிவிக்காமல் தொகுதியில் பல பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தும் உரிமையெல்லாம் ஏற்கெனவே ஆணையத்துக்கு உள்ளது. இப்படியெல்லாம் செய்தால் வீண் செலவுதானே என்று நாட்டில் இதர துறைகளில் நடக்கும் பிரமாண்டமான வீண் செலவுகள், ஊழல்கள் பற்றியெல்லாம் கவலைப்படாத சிலருக்கு இதைக் குறித்து மட்டும் கவலை வருகிறது.

முதலில் இப்படிப் பல தொகுதிகளில் மறு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு வராது. காரணம், மக்களுக்கு இப்போது ரகசிய ஓட்டின் மூலம் எல்லாரையும் நிராகரிக்கும் உரிமை வந்துவிட்டதால், ஒவ்வொரு கட்சியும் முன் எப்போதையும்விட தங்கள் வேட்பாளர் தேர்வில் எச்சரிக்கையாக இருப்பார்கள். கட்டாயம் கிரிமினல்களை நிறுத்த முடியாது. பெரும் ஊழல் ஆசாமிகளை நிறுத்த முடியாது. உள்ளூர் ரௌடிகளை நிறுத்த முடியாது. சொந்தக் கட்சிக்காரர்களும் கட்சி விசுவாசிகளும்கூட அத்தகைய வேட்பாளருக்கு எதிராக நிராகரிப்புப் பொத்தானைப் பயன்படுத்திவிட முடியும்.

கட்சிகள் முன்பைவிட தரமான வேட்பாளர்களை நிறுத்தச் செய்வதுதான் நிராகரிப்பு உரிமையின் முதல் பெரும் பயனாக இருக்கும். இது ஒரே தேர்தலில் நிகழாவிட்டாலும் படிப்படியாக நிகழும். அப்படித் தரமான வேட்பாளர்கள் நிறுத்தப்படும்போது அடுத்த பயனாக,தேர்தலில் விரக்தியால் பங்கேற்காமல் இருப்போரெல்லாம் கலந்துகொள்ளும் ஊக்கம் ஏற்படும். ‘நோட்டா’-வைத் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்கள் பல காத்திருக்கின்றன. தேர்தல் செலவைச் சமமாக்குவது, கட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வது, உட்கட்சித் தேர்தல்களைத் தேர்தல் ஆணையமே நடத்துவது, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறுவது, பிரதிநிதிகளைப் பதவியிலிருந்து திரும்பப் பெறும் மக்கள் அதிகாரம், கொள்கை விஷயங்களில் மக்களிடம் நேரடியான கருத்து வாக்கெடுப்புச் சட்டம் என்று நீண்ட பட்டியல் உள்ளது. இவையெல்லாம் இந்தியாவில் நடக்குமா என்று ஏங்குவோர் பலருண்டு. மறைந்த சமூக ஆர்வலர்
அ.கி. வேங்கடசுப்பிரமணியன் எனக்கு ‘49 ஓ’-வை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகளுக்கு முன் இதற்காகப் பிரச்சாரத்தில் நான் ஈடுபடத் தொடங்கியபோது இதெல்லாம் என் வாழ்நாளில் நடக்குமா என்ற ஏக்கத்துடனேதான் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால், இதோ நடந்துவிட்டது. கூடவே, எல்லாமே 10 ஆண்டுகளில் நடந்துவிடும் என்ற நம்பிக்கையும் இப்போது வந்திருக்கிறது!

No comments:

Post a Comment