சென்னை உயர் நீதிமன்றத்தில், நிரந்தர நீதிபதிகளாக விமலா, விஜயராகவன் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உயர் நீதிமன்றத்தில், பதிவாளர் ஜெனரலாக பணியாற்றிய நீதிபதி விமலா, கடந்த, 2011 டிசம்பரில், உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய விஜயராகவன், கடந்த, 2012 மார்ச் மாதத்தில், உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர்கள் இருவரும், தற்போது நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, கடந்த வாரம், ஜனாதிபதி பிறப்பித்தார். இதையடுத்து, நீதிபதிகள் விமலா, விஜயராகவனுக்கு, நேற்று, உயர் நீதிமன்றத்தில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது. தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் முத்துகுமாரசாமி, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment