முறைகேடு நடக்காமல் தடுக்க பறக்கும் படைகள்
துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்குகிறது.
மெயின் தேர்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளி, அடையாறு அவ்வை இல்லம் மேல்நிலைப்பள்ளி உட்பட 14 மையங்களில் தேர்வு நடக்கிறது.
முறைகேட்டை தடுக்க படைகள்:
மொத்தம் 1372 பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களில் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவது முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. தேர்வு முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் துணைச் செயலாளர்கள், சார்பு செயலாளர்கள் தலைமையில் தனித்தனியே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.ஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.
பொது அறிவுத் தாள்:
3 தாள்களை உள்ளடக்கிய மெயின் தேர்வில் முழுக்க முழுக்க பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஞாயிற்றுக்கிழமை தேர்வு முடிவடைகிறது.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். பின்னர் மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மதிப்பெண், விருப்பம், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
No comments:
Post a Comment