Wednesday, 30 October 2013

இலவசப் பொறியியல் கல்வி, வேலை வாய்ப்பு வழங்கும் ரயில்வே துறை


இலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கி, எல்லாவற்றுக்கும் மேலாக படித்து முடித்தவுடன் வேலையையும் வழங்குகிறது ரயில்வே துறை.

எல்லோருக்கும் கனவு

"ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்து உடனடியாக கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற வேண்டும்" பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு இதுதான்.

பன்னாட்டு நிறுவனங்கள், இன்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய பெற்றோர்களின் ஆசையாக இருக்கிறது.

இலவச பொறியியல் படிப்பு

இப்படிப்பட்ட சூழலில், மாதந்தோறும் உதவித் தொகையுடன் பொறியியல் படிப்பை தந்து, படித்து முடித்த கையோடு அரசு வேலையும் கிடைக்கிறது என்றால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது. மத்திய அரசின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறைதான் அந்த கொடை வள்ளல்.

உதவித் தொகையுடன் பொறியியல் படிப்பை முடித்ததும் வேலையும் பெறும் அந்த அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்யும் பொறுப்பு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் (யு.பி.எஸ்.சி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு நடத்தி, தகுதியான 42 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வில் மொத்தம் 3 தாள்கள். ஒவ்வொன்றுக்கும் தலா 200 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண். முதல் தாளில் பொது விழிப்புணர்வு திறன், ஆங்கிலம், பொது அறிவு, உளவியல் சம்பந்தப்பட்ட கேள்விகளும், 2ஆம் தாளில் இயற்பியல், வேதியியல் தொடர்பான கேள்விகளும், 3வது தாளில் கணிதக் கேள்விகளும் இடம்பெறும். அனைத்தும் கொள்குறி வகை (அப்ஜெக்டிவ்) கேள்விகள்தான்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆளுமைத்திறன் தேர்வு நடத்துவார்கள். இதற்கு 200 மதிப்பெண். தேர்வு செய்யப்படும் நபர்கள் ரயில்வே அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு, ரயில்வே பணிமனையில் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலம் 4 ஆண்டுகள். முதல் இரண்டு ஆண்டு காலத்தில் உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.9,100-ம், 3ஆம் ஆண்டும், 4ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களும் ரூ.9,400-ம், எஞ்சிய 6 மாத காலத்தில் மாதந்தோறும் ரூ.9,700-ம் வழங்கப்படும். 4 ஆண்டு படித்து முடித்ததும் தேர்வு நடத்தப்பட்டு ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பி.இ. மெக்கானிக்கல் பட்டம் வழங்கப்படும்.

ரயில்வே வேலை

தேர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ரயில்வே துறையில் மெக்கானிக்கல் என்ஜினியராக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

யார் தேர்வு எழுதலாம்?

இப்பொறியியல் படிப்பில் சேர தகுதியான நபர்களை தேர்வு செய்ய யு.பி.எஸ்.சி. ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரண்டீஸ் தேர்வை நடத்துகிறது. 2014-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜனவரி 12-ஆம் தேதி சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.upsc.gov.in) நவம்பர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிளஸ் டூ முடித்தவர்கள், பொறியியல் முதல் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது பிளஸ் டூ படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்தான். 1.1.2014 அன்றைய தேதியின்படி வயது 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment