Wednesday, 16 October 2013

நோபல் நாயகர்கள் - பொருளாதாரம்



நோபல் நாயகர்கள் - கருத்தில் வேறுபாடு, விருதில் பங்கு!


பொருளாதாரத்துக்கான நோபல் நினைவு விருது யூஜீன் ஃஃபாமா (74), ராபர்ட் ஷில்லர் (67), லார்ஸ் பீட்டர் ஹேன்சன் (60) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. சந்தை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஊகிக்க முடியும் என்ற கருத்தில் ஷில்லருக்கும் ஃபாமாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், செறிவான புரிதலுக்கு அவர்களுடைய கோட்பாடுகள் வழிகாட்டுவதால் இருவருமே தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

ராபர்ட் ஷில்லர், யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். யூஜீன் ஃபாமாவும் லார்ஸ் பீட்டரும் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.

நிதிச் சந்தையைத்தான் ஃபாமாவும் ஷில்லரும் ஆராய்ந்தார்கள். ஆனால், இருவரும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கருத்து வேறுபாடுகள் சாதாரணமானவை அல்ல. முதலீட்டு உத்தி, நிதிக் கட்டுப்பாடு, பொருளாதாரக் கொள்கை என்ற அனைத்துமே இவ்விருவரின் கருத்துகளுக்கும் உள்பட்டே தீர்மானிக்கப்பட வேண்டிய அம்சங்களாக இருக்கின்றன.

உதாரணத்துக்கு, ஷில்லரின் வழியைப் பின்பற்றுவதாக இருந்தால், வீடு கட்டுவதில் உடனே ஈடுபடாமல் சிறிது காலம் காத்திருந்து - விலை குறைவாக இருக்கும்போது - கட்டியோ, வாங்கியோ பயன் அடையலாம். ஆனால், அவரைப் போல சரியாகக் கணிப்பவர்கள் யார்? அவராலேயே எல்லா காலத்திலும் சரியாகக் கணித்துவிட முடியுமா?

ஃபாமாவின் கருத்தைப் பின்பற்றுவதாக இருந்தால், சந்தையில் வீடு அல்லது வீட்டுமனையின் விலை என்பது அரசின் கொள்கை, மக்களிடம் உள்ள பணப்புழக்கம், அவர்களுக்கு ஏற்படும் சொந்த வீட்டுக் கனவு, பங்குச் சந்தையில் வீழ்ச்சி, தங்கம் - வெள்ளி விலை உயர்வு, வீட்டு வாடகை அதிகரிப்பு, குடியிருக்க வீடு கிடைக்காத நிலைமை போன்ற பல்வேறு அம்சங்களைச் சார்ந்தது. வருமான வரி பிடித்தத்தைக் குறைத்துக்கொள்வதற்காகக்கூட வீடு கட்டவோ, வாங்கவோ நினைப்பவர்கள் பலர். எனவே, ஃபாமாவின் கருத்தையும் நிராகரித்துவிட முடியாது.

சந்தைகள் ‘நடைமுறைகளை’க் கணக்கில்கொண்டு ‘அறிவியல்பூர்வமாக’ச் செயல்படுபவை, வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையில் பாலமாகச் செயல்படுபவை என்கிற அடிப்படையில் ஃபாமா தெரிவித்த கோட்பாடு, பங்குச் சந்தை நிதியம் உருவாகவும் நிதிக்கட்டுப்பாடுகள் குறையவும் காரணமாக அமைந்தன.

ஆனால் ஷில்லரோ, சந்தைகள் அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதில்லை, திறமைக் குறைவாகவே செயல்படுகின்றன என்ற தரவுகளைத் தொகுத்து, ஃபாமாவைக் கடுமையாக விமர்சித்தார். பங்குச் சந்தையிலும் வீடமைப்புத் துறையிலும் சரிவு ஏற்படும் என்று முன்கூட்டியே தெரிவித்து, அப்படி வீழ்ச்சி ஏற்பட்டபோது மற்றவர்களால்

2000-த்திலும் 2006-லும் நினைவுகூரப்பட்டு பிரபலமடைந்தார்.

இவ்விருவருடன் விருதைப் பகிர்ந்துகொள்ளும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன் இவர்களுடைய பொருளாதாரக் கோட்பாடுகளைப் புள்ளிவிவர அடிப்படையில் பகுப்பாய்வு செய்து முதலீட்டுத் திட்டங்களைத் தீர்மானிக்கும் வகையில் வழிமுறையைக் கண்டுபிடித்தார். அதைத்தான் மற்ற சமூக அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.

மூன்று பொருளாதார வல்லுநர்களும் தனித்தனியாகத்தான் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொண்டனர். அதே சமயம் மூவரும் சேர்ந்து நிதிச் சந்தை எப்படிச் செயல்படுகிறது, பங்குகளின் விலையும் கடன் பத்திரங்களின் விலையும் எப்படி மாறுபடுகிறது என்று கண்டறிந்து தெரிவித்தனர். பங்குச் சந்தைகள் குறுகிய காலத்தில் சரியாகக் கணிக்க முடியாதபடி ஏற்ற இறக்கங்களுடன் உள்ளன. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது எளிதாக ஊகித்துவிடும் நிலையில் இருக்கின்றன. அதாவது, திட்டமிட்ட கணக்கீடுகளும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரணிகளும் இணைந்து சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தீர்மானிக்கின்றன என்று அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

நிதிச் சந்தைகளின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகள் 1980-களில் தொடங்கின. சந்தைகள் திறமையானவை, சரியாக முடிவெடுக்கக்கூடியவை என்கிற அடிப்படையில் சந்தைகளின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 2000-களில் வீடுகளின் விலை உயரத் தொடங்கியபோது விலைவாசி உண்மையைப் பிரதிபலிப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், நிலைமை முற்றி நெருக்கடி ஏற்பட்டபோது ஷில்லரின் கோட்பாடு சரியென்று உணரப்பட்டு நிதிச் சந்தைக்குக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொருளாதார முடிவுகளுக்கு முதலீட்டாளரின் மனநிலையும் முக்கிய காரணம் என்று உணரப்பட்டது.

எதிர்காலத்திலும் நடவடிக்கைகளை இதையொட்டியே மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சில துறைகளில் எழுச்சி ஏற்பட்டுவிட்டதைப்போன்ற அடையாளங்கள் தோன்றும்போதே அவை இயற்கையா, அல்லது மற்றவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தற்காலிகமான செயற்கையா என்று கண்டுபிடித்துவிட முடியுமா என்று அமெரிக்க பெடரல் அரசின் நிதித் துறை அதிகாரிகள் இப்போது விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

சொத்துகளின் மதிப்பு எப்படி இருக்கும் என்று மிகக் குறுகிய காலத்தில் ஊகித்துவிட முடியாது என்று 1960-களிலேயே கூறியவர் ஃபாமா. பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்று ஊகிக்கும் பணியை டப்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்போது மேற்கொண்டார். பொருளியல் பட்ட வகுப்பு மாணவரான ஃபாமா தனது பேராசிரியருக்காக அந்த வேலையில் ஈடுபட்டார். எதிர்காலத்தில் விலைகள் எப்படி இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கும் வழிகளையும் உத்திகளையும் வகுக்கும் பொறுப்பு ஃபாமாவிடம் தரப்பட்டது. அவரும் வழியையும் உத்தியையும் கண்டுபிடித்தார். ஆனால், எதிர்பார்த்தபடி ஊகிக்க முடியாமல் தோல்விதான் ஏற்பட்டது. “திறமைமிகு சந்தை” என்ற சொல்லை அடைமொழியாகக் குறிப்பிட்டு, தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் ஒரு கோட்பாட்டை உருவாக்கினார் ஃபாமா. அதாவது, சந்தை என்பது அன்றைய தேதியில் சந்தைக்குக் கிடைக்கும் பொருளாதாரக் காரணிகள் பற்றிய தரவுகளாலும் அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளாலும் தீர்மானிக்கப்படுவது என்ற முடிவுக்கு வந்தார்.

(உதாரணத்துக்கு லிபியா மீது அமெரிக்கா போர் தொடுக்க முடிவு செய்துவிட்டது என்று செய்தி வந்தால், உடனே சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயருகிறது. இதில் பொருளாதாரம் சார்ந்த காரணம் எதுவும் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் போர்க் கப்பல்கள் நடமாட்டத்தால் எண்ணெய்க் கப்பல்களால் போய்வர முடியாது என்ற அச்சமே எண்ணெய் விலையை உயர்த்தக் காரணமாகிறது. போரே தொடங்கவில்லை என்றாலும், போர் வரலாம் என்ற செய்தியே இங்கு விலையை உயர்த்தி சந்தையைப் பரபரப்பாக்குகிறது). 

பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகர்களின் பரிந்துரைகளைக் கேலி செய்யும் விதத்தில் பர்டன் மால்கீல் என்ற பொருளாதார அறிஞர் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். குரங்கின் கண்ணைக் கட்டிவிட்டு, அதன் கையில் சில வீச்சு அம்புகளைக் கொடுத்து, பங்குச் சந்தையில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய பலகை மீது வீசச் சொன்னால், முதலீட்டு ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் நிறுவனங்களாகவே அவையும் இருப்பதைக் காணலாம் என்கிறார். அதாவது, நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கு புத்திசாலித்தனமோ அனுபவமோ தேவையில்லை என்கிறார். அவர் சொன்னது சரிதானா என்று சரிபார்க்க உண்மையிலேயே ஒரு குரங்கின் கையில் வீச்சம்புகளைக் கொடுத்து வீச வைத்தும் பார்த்திருக்கிறார்கள். பர்டன் மால்கீல் கூறியது சரிதான் என்று தெரிந்துகொண்டனர்!

எனவே, ஃபாமா கூறிய பங்குச் சந்தை நிதிய அடிப்படையில் பங்குகளை ஒரே விதமான நிறுவனங்களிலோ, பணப் பயன் தருவனவற்றிலோ முதலீடு செய்யாமல், பரந்துபட்ட விதத்தில் முதலீடு செய்து இப்போது லாபம் சம்பாதிக்கின்றனர்.

பங்குச் சந்தைகள் மிகத் திறமையாகச் செயல்பட முடியாமல் சில அம்சங்கள் தடுக்கின்றன என்பதை 1980-களின் தொடக்கத்திலேயே ஷில்லர் தெரிவித்தார். நிறுவனங்கள் தரும் டிவிடெண்டுகளைவிட சந்தையில் பங்குகளின் விலையில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டினார். இந்த ஆதாரமற்ற ஏற்ற இறக்கங்கள் எதிர்பார்த்தபடியே சரிவில் கொண்டுபோய் விடும் என்பதையும் அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார். விலைவாசிகள் எப்படி உயர்கின்றன என்பதையும் அவர் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தொகுத்து ஆராய்ந்தார். சிலவகை சொத்துகளை வாங்கி விற்பதால் ஏற்படக்கூடிய நிச்சயமற்ற தன்மைக்கு ஏற்ப அவற்றின் விலை மிக அதிகமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1980-களிலேயே பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்து ஷில்லர் புத்தகம் எழுதினார். “பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் நியாயமாகத்தான் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதே பொருளாதாரச் சிந்தனைகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க பிழை” என்று துணிந்து கூறியுள்ளார் ஷில்லர். பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்ற இறக்கங்களுக்கு முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த சிந்தனை காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment