Tuesday, 1 October 2013

சந்திப்போமா…?


தொடர்ந்து ஏதாவதொரு போட்டித்தேர்வு அல்லது அதற்குப் பிந்தைய நேர்முகத்தேர்வு என்பது நடந்து கொண்டே இருக்கிறது. தேர்வுக்குச் செல்வோரிடம் நடப்புச் செய்திகளிடமிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளிக்க இப்பகுதி உதவும். 

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013:

உணவு உரிமை சட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இது 2013, செப்டம்பர் 12ந் தேதியன்று சட்டமாக மாறியுள்ளது.

இந்தியாவின் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 3ல் 2 பங்கினருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குவது இதன் நோக்கம். இது தொடக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு தரப்படும்.

அரிசி கிலோ ரூ.3க்கும் கோதுமை ரூ.2க்கும் தானியங்கள் ரூ.1க்கும் அரசால் வினியோகிக்கப்படும்.

மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட குழந்தைகள் ஆகியோருக்கு இந்த சட்டத்தின் கீழ் தினசரி இலவச உணவு தரப்படும்.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தற்போது மாநிலங்களூக்குத் தரப்படும் உணவுப் பொருட்கள் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் 6 மாதம் வரை வழங்கப்படும்.

பொது வினியோகத் திட்டம் மாற்றி சீரமைக்கப்படும்.

மாநில உணவுக் கழகங்கள் விரைவில் இந்த சட்ட நிறைவேற்றலுக்காக அமைக்கப்படும். 

இதனால் மத்திய அரசுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் நிதி ஆண்டுக்கு 1.24 லட்சம் கோடி.

இதை ஆதரிப்பது எதனால்?

இதன் ஆதரவாளர்கள் கூறும் காரணங்கள் இவை தான். 

எதிர்கால சந்ததியினருக்கான மனித முதலீடு என்பது இதை உருவாக்கியுள்ள மத்திய ஆளும் கூட்டணியிலுள்ள காங்கிரசின் வாதம். இதை எதிர்ப்பார்ப்பவர்கள் கூறும் காரணங்கள்:

ஏற்கனவே உள்ள பொது வினியோகத் திட்டம் சீரமைக்கப்பட்டால் போதும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதில் வைத்து பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எனவே கடுமையான நிதி நெருக்கடியை இது ஏற்படுத்தும்.

மாநிலங்களின் பொது வினியோக நிர்வாகத்தில் மத்திய அரசு தேவையில்லாமல் தலையிடும் முயற்சி தான் இது.

இந்தத் திட்டத்தை காரணம் காட்டி மாநிலங்களுக்குத் தரப்படும் பொது வினியோக உணவுப் பொருட்கள் வெகுவாகக் குறைந்து விடும்.

விவசாயிகள் இந்தத் திட்டத்திற்காக தங்களது பொருட்களை விற்கும்போது மார்க்கெட் விலையில் விற்க முடியாது. கொள்முதல் விலையில் தான் விற்க முடியும்.

நேர்முகத் தேர்வில் நாம் எப்படி இதை முடிக்கலாம்?

உணவுப் பாதுகாப்பு சட்டம் என்பது முற்றிலும் மறுக்க முடியாத ஒரு தேவைதான். இந்தியாவில் இன்னமும் 3ல் 2 பங்கினர் போதிய உணவும் ஊட்டச் சத்தும் இல்லாமலிருப்பதால் அரசின் இந்த முயற்சி வரவேற்கக்கூடியதுதான்.

எனினும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எண்ணற்ற மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களைப் போல இதிலும் நடைமுறைக் குறைபாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

விவசாயிகளுக்கு கொள்முதல் விலை தரப்பட்டே விளை பொருட்கள் பெறப்பட வேண்டும்.

திட்ட நடைமுறையில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம்.

மிகப் பெரிய நிதித் தேவையை இது கொண்டிருப்பதால் காலப்போக்கில் இது நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்கள் சந்தேகமாகவே உள்ளன.

No comments:

Post a Comment