Friday, 4 October 2013

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்


பீகாரில் நடந்த மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதேபோல், மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள எம்.பி ஜெகதீஷ் சர்மா மற்றும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாட்டுத் தீவன சப்ளையர்கள் உட்பட 35 பேருக்கு 4 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் கடந்த 1990ம் ஆண்டுகளில் கால்நடை தீவனம் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. மாநிலத்தின் பல கருவூலங்களில் இருந்து போலி ரசீதுகள் மூலம் பணம் எடுக்கப்பட் டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அப்போது பீகாருடன் இணைந்திருந்த ஜார் கண்டில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத் தில் இருந்து, கால்நடை தீவனம் வாங்க போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7 கோடி பெறப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக முதல்வர்களாக இருந்த லாலு பிரசாத் (65), ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் அப்போதைய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 56 பேர் மீது புகார் கூறப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக கடந்த 1996ல் சிபிஐ விசாரணையை தொடங்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால், முதல்வர் பதவியை 1997ம் ஆண்டு லாலு ராஜினாமா செய் தார். சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்ற கோரி, உச்ச நீதிமன்றத்தில் லாலு தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் இந்த வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக இழுத்தடித்தது. வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள் 7 பேர் இறந்தனர். சிலர் அப்ரூவராக மாறினர். ஒருவர் விடுவிக்கப்பட்டார். 

இவ்வழக்கில் நீதிபதி பிரவாஸ் குமார் சிங் கடந்த மாதம் 30ம் தேதி தீர்ப்பளித்தார். மாட்டு தீவன ஊழலில் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா, 6 அரசியல்வாதிகள் (இதில் ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மாவும் ஒருவர்), 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 45 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். இவர்களில் 8 பேருக்கு மட்டும் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 

லாலு, ஜெகன்னாத் மிஸ்ரா உட்பட 36 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கோர்ட்டில் ஆஜராகி இருந்த லாலு, ஜெகன்னாத் மிஸ்ரா உள்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா 
மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக, இறுதி கட்ட விவாதம் நடந்தது. அப்போது லாலு உட்பட 36 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கும்படி சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. 

குறைவான தண்டனை வழங்கும்படி குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி பிரவாஸ் குமார், தண்டனை விவரங்களை மாலை 2.30 மணிக்கு அறிவித்தார். அதில், லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ழீ2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தள எம்.பி ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ ரானாவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதேபோல் ஊழலுக்கு உடந்தையாக இருந்த 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும், மாட்டுத் தீவனங்களை சப்ளை செய்த 25 பேர் உட்பட மற்ற 29 பேருக்கு 4 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

பாதுகாப்பு காரணங்களுக்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றவாளிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. லாலுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்யப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் மனோஜ் கூறியுள்ளார். ஊழல் வழக்கில் லாலுவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதியிழப்பு ஆகியவை அரசியல் கட்சி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐயா, நான் அப்பாவி: லாலு உருக்கம் 

வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்த லாலு, ‘‘ஐயா, நான் அப்பாவி. அரசியல் சதி காரணமாக இந்த வழக்கில் என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எனக்கு எப்படி தண்டனை வழங்கலாம்?’’ என உருக்கமாக கூறினார். இதற்கு பதில் அளித்த நீதிபதி, ‘‘நீங்கள் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்’’ என்றார்.

பதவி இழக்கும் முதல் தலைவர்

கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பதவிகளை உடனடியாக பறிக்கவும், தண்டனை முடிந்த பின் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஊழல் வழக்கில் சிக்கி 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி ரஷீத் மசூத் தனது பதவியை முதன் முதலாக இழக்க உள்ளார். 

அதற்கு அடுத்தப்படியாக, சிபிஐ நீதிமன்றம் நேற்று அறிவித்த தண்டனை மூலம் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள எம்.பி ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி பதவிகள் பறிபோக உள்ளது. மேலும், சிறை தண்டனை முடிந்த பிறகு 6 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியை இழக்கும் முதல் முக்கிய தலைவர் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பிரிவுகள்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 120,பி(குற்ற சதி), 420 (ஏமாற்றுதல்), 467 (மோசடி), 468 (ஏமாற்றுவதற்காக செய்யும் மோசடி), 477ஏ(ஆவணங்களில் மாற்றி முறைகேடு செய்தல், 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திக்...திக் நிமிடங்கள்

ராஞ்சி : கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார் என்றாலும், அவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் என்ற திக் திக்...கேள்விக்கு நேற்று பதில் கிடைத்து விட்டது. லாலுவை பொறுத்தவரை ‘கதி’ நாளான நேற்று காலையில் இருந்தே திக்கெட்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டது. காலையில் இருந்து தீர்ப்பு அறிவித்த வரை டென்ஷனான தருணங்கள் தொகுப்பு:

காலை 10: லாலு சிறையில் அடைக்கப்பட்ட ராஞ்சியில் ஆரம்பித்து பாட்னா வரை மட்டுமல்ல, டெல்லி வரையும் லாலு கதி என்னவோ என்ற பரபரப்பு தான் பரவியது. சேனல்கள் ஒன்றன்பின் ஒன்றாக லாலுவின் தீர்ப்பு அறிவிப்பை ஒட்டி தகவல்கள், பேட்டிகளை குவித்தபடி இருந்தன. 
10.30: ராஞ்சியில் லாலுவின் வக்கீல்கள் தீவிர ஆலோசனையில் இறங்கியிருந்தனர். என்ன சட்டரீதியான காரணங்களை சுட்டிக்காடி தண்டனை காலத்தை குறைக்க முடியும் என்று சட்ட புத்தகங்களை புரட்டியபடி இருந்தனர். 
10.45: இதற்கு முன் வேறு ஏதாவது வழக்கில் உடல் பாதிப்பை காட்டி தண்டனை காலத்தை குறைக்கப்பட்டிருந்ததா? அதற்கு வழி உண்டா? ஜாமின் பெற முடியுமா? என்பது பற்றியும் வக்கீல்கள் தொடர்ந்து விவாதித்தனர். 
11.00: வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம் கோர்ட் விசாரணை ஆரம்பமாகிறது. நீதிபதி பிரவாஸ் குமார் சிங் விசாரிக்கிறார். 
11.15: லாலுவுக்கு உடலில் பல வியாதிகள் உள்ளன; அவர் சீனியர் சிட்டிசன். அதனால் தண்டனை காலம் குறைக்கப்பட வேண்டும் என்று அவரின் வக்கீல் வாதிடுகிறார். 
11.30: அரசு வக்கீல் வாதிடுகிறார்; அதிக பட்ச தண்டனை தர வேண்டும் என்று தன் வாதத்தை வைக்கிறார். 
11.45: பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி கூறுகிறார். 
12.00: ராஞ்சியில் லாலு வீட்டில் அவசர ஆலோசனை நடக்கிறது. ராப்ரி தேவி, அவர் மகன் தேஜஸ்வி மற்றும் தலைவர்கள் ஆலோசிக்கின்றனர். 
1.00: லாலுவே தொடர்ந்து தலைவராக இருப்பார்; அப்படி இல்லாத பட்சத்தில் ராப்ரியோ, தேஜஸ்வியோ இருக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது. 
2.00: பரபரப்பாகிறது ராஞ்சியில் லாலு அடைக்கப்பட்ட சிறை. தீர்ப்பு வெளியாக சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் வக்கீல்கள் பரபரப்பாக காணப்படுகின்றனர். 
2.30: வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி தீர்ப்பை வாசிக்கிறார். ‘குற்றம்சாட்டப்பட்ட லாலுவுக்கு 5 ஆண்டு...என்று ஆரம்பித்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விவரங்களை தெரிவிக்கிறார். 
2.31: சிறையில் உள்ள லாலுவுக்கும், முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவுக்கும் தண்டனை விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
3.00: அப்பீல் செய்யப்போவதாக லாலுவின் வக்கீல் தெரிவிக்கிறார். 
4.00: ராஷ்ட்ரிய ஜனதா அலுவலகம் காலியாக உள்ளது. லாலு வீட்டில் சில தலைவர்கள் மட்டுமே, ராப்ரி, தேஜஸ்வியிடம் ஆலோசித்து விட்டு வெளியேறுகின்றனர்.

பாஜ., ஐக்கிய ஜனதா தளம் வரவேற்பு

லாலுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பா.ஜ செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘1990ம் ஆண்டுகளில் மாட்டுத் தீவன ஊழல் மிகப் பெரிய ஊழல். ஊழலில் ஈடுபட்டால் சட்டம் சிறைக்கு அனுப்பும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்’’ என்றார். பா.ஜ மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். தாமதமான தீர்ப்பு என்றாலும்,

மறுக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக இருக்கும்’’ என்றார். ஐக்கிய ஜனதா தள எம்.பி. சபிர் அலி கூறுகையில், ‘‘அரசியலில் செல்வாக்கு மிகுந்தவர் லாலு என்பதை யாரும் மறுக்க முடியாது. உயர் பதவியில் இருந்தாலும், ஊழல் செய்தால் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது. இது ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை நிச்சயம் பலவீனமாக்கும்’’ என்றார். 

தண்டனை விவரம்

லாலு பிரசாத் யாதவ் (பீகார் முன்னாள் முதல்வர்) , 5 ஆண்டு சிறை. ரூ.25 லட்சம் அபராதம்
ஜெகநாத் மிஸ்ரா (பீகார் முன்னாள் முதல்வர்) , 4 ஆண்டு சிறை. ரூ.2 லட்சம் அபராதம்.
ஜெகதீஷ் பிரசாத் (ஐக்கிய ஜனதா தள எம்.பி) , 4 ஆண்டு சிறை. ரூ.5 லட்சம் அபராதம்.
ஆர்.கே.ரானா (முன்னாள் எம்.எல்.ஏ) , 5 ஆண்டு சிறை. ரூ.30 லட்சம் அபராதம்.
4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 25 சப்ளையர்கள் , தலா 4 ஆண்டு சிறை. 
கால்நடை துறை முன்னாள் அதிகாரி பி.என். சர்மா , 5 ஆண்டு சிறை, ரூ.1.5 கோடி அபராதம்.

No comments:

Post a Comment