Wednesday, 11 September 2013

குரூப் 2 தேர்வுக்கு தயார் ஆகலாமா?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), இந்த ஆண்டு குரூப் 2, நேர்முகத் தேர்வு பிரிவில் உள்ள 1,064 பணி இடங்களுக்கு முதனிலை எழுத்துத் தேர்வை டிச.,1ல் நடத்துகிறது. இதற்கு அக்.,4 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எத்தனை பிரிவுகள்:

வணிகவரித்துறை துணை அலுவலர், சார்பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வர், தணிக்கை ஆய்வர், வருவாய் உதவியாளர் உட்பட 19 பிரிவுகளின் கீழ் தேர்வு நடக்கிறது.

குரூப் 2 தேர்வு நடப்பது எப்படி?

முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படும்.

முதனிலைத் தேர்வு, மூன்று மணி நேரம் நடைபெறும். வினாக்கள் கொள்குறி வகையில் இருக்கும். 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும்.

முதனிலைத் தேர்வு, இரண்டு வகைகளைக் கொண்டது.
1.   பொது அறிவு (75), திறனறிவு தேர்வு (25) மற்றும் பொதுத் தமிழ் (100)
2.   பொது அறிவு (75), திறனறிவு தேர்வு (25) மற்றும் பொது ஆங்கிலம் (100)
விண்ணப்பதாரர், முதல் 100 வினாக்களுக்கு பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வில் பதிலளிக்க வேண்டும். அடுத்த 100 வினாக்களுக்கு தேர்ந்தெடுத்த மொழிப் பாடங்களில் (பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) பதிலளிக்க வேண்டும். பொது அறிவு வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலும், திறனறித் தேர்வு மற்றும் மொழிப்பாட வினாக்கள் பத்தாம் வகுப்புத் தரத்திலும் இருக்கும்.

முதன்மைத் தேர்வு, மூன்று மணிநேரம் நடைபெறும். வினாத்தாள் இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
1.   முதல் பிரிவில், பொது அறிவு தொடர்பான 125 வினாக்கள் கொள்குறி வகையில் இருக்கும். 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வை, 2 மணி நேரத்தில் எழுத வேண்டும்.
2.   இரண்டாவது பிரிவில், கட்டுரை எழுதுதல் தொடர்பான இரண்டு கேள்விகள் பட்டப்படிப்பு தரத்தில் கேட்கப்படும். ஒரு மணி நேரம் நடக்கும் இத்தேர்வு, 50 மதிப்பெண்களை கொண்டது. தேசிய மற்றும் மாநில அளவில், நடப்பு நிகழ்வுகள் தொடர்பான வினாக்கள் இடம் பெறும்.
நேர்முகத் தேர்வு 40 மதிப்பெண்களுக்கு நடக்கும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

முதனிலைத் தேர்வில் இருந்து, ஒரு பணியிடத்துக்கு 10 பேர் வீதம் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, தொடர்ந்து நேர்காணல்/வாய்மொழித் தேர்வு நடைபெறும். இவ்வாறு மூன்று தேர்வுகளிலும் பெறும் மொத்த மதிப்பெண்கள், பணி விருப்பம், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடைப்படியில், இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.


No comments:

Post a Comment