இந்திய அழகிக்கு மிஸ் மல்டிமீடியா பட்டம்
இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் பிலிப்பின்ஸ் அழகி மேகன் யங் (23) பட்டம் வென்றுள்ளார். பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தப் பட்டத்தை வென்றிருப்பது இதுவே முதன்முறை.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற நவ்நீத் கெளர், முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை என்றாலும் மிஸ் மல்டிமீடியா பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார்.
63ஆவது உலக அழகிப் போட்டியில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இதன் இறுதிப் போட்டி இந்தோனேசியாவில் பாலி தீவில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிலிப்பின்ஸ் அழகியான மேகன் யங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு சீனாவைச் சேர்ந்த 2012ஆம் ஆண்டின் உலக அழகி வென்ஜியாயு மகுடம் சூட்டினார்.
மேகன் யங் இப்போது திரைப்படக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
மகுடம் சூட்டிக் கொண்ட பிறகு யங் கூறுகையில், “என்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உலக அழகியாக என்னைத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
அமெரிக்காவில் பிறந்த மேகன், தனது 10 வது வயதில் பிலிப்பின்ஸில் குடியேறினார். திரைப்பட இயக்குநராக, கேமராவுக்கு பின்னால் இருக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.
பிரான்சின் மேரின் லார்பெலின் 2ம் இடத்தையும், கானா நாட்டின் நா ஒகைலி ஷூட்டர் 3ஆம் இடத்தையும் பிடித்தனர்.
No comments:
Post a Comment