முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வு எழுதினர். இதன் முடிவு, இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 52 கேள்விகளில், எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும், இதனால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், ஐகோர்ட், மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு, டி.ஆர்.பி.,க்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால், கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை, எனினும், அந்த கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கலாம்' என்ற, டி.ஆர்.பி.,யின் கருத்தை, கோர்ட் ஏற்கவில்லை. "பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன்?, இதற்கு டி.ஆர்.பி., தான் பொறுப்பு' என்று, கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான, அச்சகத்தின் மீது, டி.ஆர்.பி., கடும் கோபத்தில் உள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான், கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ்' என, கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில், கேள்வித்தாள்கள் தவிர, வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு, பின், "ஏ.பி.சி.டி.,' என, நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில், "பி' வகை கேள்வித்தாளில் தான், எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில், "பான்ட்' கோளாறு ஏற்பட்டதால், எழுத்துப்பிழை ஏற்பட்டதாக, அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன், அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள், கேள்விகளை சரிபார்ப்பர்; அச்சடிக்கப்பட்டபின், சரிபார்ப்பது கிடையாது. அப்படியே, சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு, அச்சகம் தான் காரணம். இதற்காக, சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில்' தொகையில், 25 சதவீதம் வரை, அபராதம் விதிப்பது, அந்த அச்சகத்தை, "கறுப்பு பட்டியலில்' சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment