"ஆதார் அடையாள அட்டை, அனைவருக்கும் கட்டாயமில்லை. சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு, இந்த அடையாள அட்டையை கட்டாயம் வழங்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற நீதிபதி, கே.எஸ்.புட்டாசாமி, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கு, நீதிபதிகள், பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோரைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரிக்கப்படுகிறது.
மனுதாரர் தன் மனுவில் கூறியிருந்ததாவது: "ஆதார் அட்டை இருந்தால் தான், அரசின் மானிய உதவிகள் வழங்கப்படும்; அந்த அட்டை இல்லாதவர்களுக்கு எவ்வித அரசு உதவிகளும் கிடைக்காது' என, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கின்றன. இது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
மகாராஷ்டிரா மாநிலத்தில்,"திருமண பதிவுக்குக் கூட, ஆதார் அடையாள அட்டை அவசியம்' என, கூறப்படுகிறது. எனவே, ஆதார் அடையாள அட்டை பெறுவது கட்டாயமில்லை என்பதை, கோர்ட் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார். இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், பதிலை தெரிவிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "தனி நபர்களின் அனுமதியோடு தான், ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த அடையாள அட்டையை வைத்திருந்தால், அரசின் பலன்கள் எளிதாக கிடைக்கும் என்பதால், அதை வாங்குவது கட்டாயம் என, அறிவித்துள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது: ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் வழங்குவதற்கு, அந்த அடையாள அட்டை அவசியம் என, நிர்பந்திக்கக் கூடாது. மேலும், பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கு, கட்டாயம், இந்த அடையாள அட்டை வழங்கப்படக் கூடாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment