சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
கல்வி உரிமை சட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, குழந்தைகள் இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 1–4–2010 முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இந்த சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு நியமிக்கப்படவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டது.இதனடிப்படையில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதி தேர்வு அவசியம் என்று 15–11–2011 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இந்த அரசாணையை எதிர்த்து டி.எஸ்.அன்பரசு உள்பட 94 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:–
உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி தேர்வு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடிந்துவிட்டது.
தகுதி தேர்வு தேவையில்லை
இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், தேர்வு நடவடிக்கையை ரத்து செய்தும், எங்களுக்கு பணி வழங்க மறுத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில், ‘‘தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையில், பிரிவு 5–ல் ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தேர்வானவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என்று கூறியுள்ளது. எனவே எதிர்காலத்தில் ஏற்படும் ஆசிரியர் காலியிடங்களை மனுதாரர்கள் 94 பேரை கொண்டு நிரப்பவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
உரிமை இல்லை
இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வேதாரண்யத்தை சேர்ந்த சுகுணா உள்பட 130 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில், ‘‘2010–ம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்துக்காக 32 ஆயிரம் பேரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. எனவே எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்கள்.இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, ‘‘தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு நடந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் கலந்துகொண்டனர் என்பதற்காக தகுதி தேர்வு எழுதாமலேயே பணியில் நியமிக்க வேண்டும் என்ற தகுதி அவர்களுக்கு வந்துவிடாது. மேலும், அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே தகுதி தேர்வு எழுதாமல் பணி கேட்கும் உரிமை மனுதாரர்களுக்கு இல்லை’’ என்று வாதம் செய்தார்.மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் காசிநாத பாரதி உள்பட பலர் ஆஜராகி வாதம் செய்தனர்.
வாதத்தை ஏற்க முடியாது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், அதன் விதிகள் ஆகியவற்றின் கீழ் ஆசிரியர் பணியிடத்துக்கு தகுதி தேர்வு கட்டாயம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மனுதாரர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவும் இல்லை, பணியில் சேரவும் இல்லை. ஆனால், அவர்கள் தரப்பில் வாதம் செய்த வக்கீல்கள், ஏற்கனவே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்துள்ளதால், அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும். பணியில் சேர்ந்த பின்னர், 5 ஆண்டுக்குள் அவர்கள் தகுதி தேர்வில் பங்கேற்பார்கள் என்று கூறினார்கள். இந்த வாதத்தை ஏற்க முடியாது.
வெளியுலகத்துக்கு தெரிந்தது
மனுதாரர்களை பொறுத்தவரை சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வுக்கு சென்றுள்ளனர். ஆனால் அதில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. ஒருவேளை அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவிக்கையில் பிரிவு 5–ல் கூறப்பட்டுள்ளது படி விதிவிலக்கு கோர முடியும்.அவ்வாறு பணியில் சேர்ந்தாலும், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். எனவே தகுதி தேர்வு எழுதாமல், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக மனுதாரர்களுக்கு பணி வழங்க உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாமல் 20 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டியது இருக்கும்.
மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு ஆசிரியர்கள் எந்த லட்சணத்தில் நியமிக்கப்படுகிறார்கள் என்ற விவரம் 2012 ஜூலை மாதம் நடந்த தேர்வின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்பு
ஆசிரியர் பணிக்கு 12–7–2012 அன்று தகுதி தேர்வு நடந்தது. அதில், 7 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அதில் ஒரு சதவீதத்தினர் கூட தேர்ச்சி பெறவில்லை. 0.50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதனால், ஆசிரியர் தகுதி துணை தேர்வு நடத்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி நடத்தப்பட்ட துணை தேர்விலும், 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, வெறும் 2.95 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் பணி அல்ல. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கினால், கல்வி தரம் குறைந்துவிடும். கல்வியின் தரம், குழந்தைகளின் நலன்தான் முக்கியம்.எனவே, மனுதாரர்களை தகுதி தேர்வு எழுதாமல், பணியில் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment