Thursday, 19 September 2013

135 சிறப்புக் காவல் பணியிடம் : விண்ணப்பம் விநியோகம்


தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு நாமக்கல் மாவட்டத்தில் 135 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக கடந்த இரு வாரத்தில் 2800 விண்ணப்பம், நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகம் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில், 760 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.

தமிழக காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறைந்த எண்ணிக்கையில் காவலர்கள் இருப்பதால், அவர்களை வைத்துக்கொண்டு அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது. அப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையின் காவலரைத் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெளியிட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 600 சிறப்புக் காவலர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் சிறப்புக் காவலருக்கு மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பம் இம்மாதம் முதல் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. அதன் முடிவுகள் வெளியான பின், உடற் தகுதித் தேர்வு நடக்க உள்ளது. அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதில் தேர்வாகும் சிறப்புப் போலீஸார் ஓராண்டுக்கு பின், மற்றொரு எழுத்துத் தேர்வில் தேர்வாகி பணிபுரிய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment