Saturday, 21 September 2013

டி.ஆர்.பி. வெளியிட்ட ‘கீ ஆன்சர்’-ல் குழப்பம்


சரியான விடை எழுதியவர்கள் குறைந்த மதிப்பெண் பெறும் அபாயம்

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) நடத்திய தேர்வுக்கான விடைத்தாள் பட்டியலில் (கீ-ஆன்சர்), பல கேள்விகளுக்கு தவறான விடைகள் குறிப்பிடப்பட்டு இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்படி விடைத்தாள்கள் திருத்தப்பட்டால், சரியாக விடை எழுதியவர்களுக்கு குறைந்த மதிப்பெண்தான் கிடைக்கும்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலை 21ம் தேதி தேர்வு நடந்தது; மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 421 மையங்களில், 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், பொருளாதாரம் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு தேர்வு நடந்தது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் கேட்கப்பட்டன.

தேர்வு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, 29ம் தேதி தேர்வுக்கான விடைத்தாள் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது. இந்த விடைகளில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைத்தாள் பட்டியலில், பல விடைகள் தவறாக இருந்ததால், தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விடைத்தாள் பட்டியல் அடிப்படையில், விடைத்தாள்கள் திருத்தப்படுமானால், தங்களது மதிப்பெண் குறைந்து, பணியில் சேரும் வாய்ப்பு தடைபடும் என்பதே அதற்கு காரணம்.

குறிப்பாக, பொருளாதாரப் பாடத்தில் 10க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, விடைத்தாள் பட்டியலில் தவறான பதில்கள் இடம்பெற்று இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: பொருளியல் பாடத்துக்கான தேர்வில், மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் யார் (வினா எண் 105) என்ற கேள்விக்கு, டி.ஆர்.பி., வெளியிட்ட விடைப் பட்டியலில் ரங்கராஜன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த கேள்விக்கு சரியான விடை மாண்டேக் சிங் அலுவாலியா. அதேபோல, தேசிய வளர்ச்சிக் கவுன்சில் எப்போது துவங்கப்பட்டது (வினா எண் – 41) என்ற கேள்விக்கு, 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சரியான விடை 1952 ஆகஸ்ட் மாதம் ஆகும். இதுபோல, பல கேள்விகளுக்கு தவறான விடை இடம்பெற்றுள்ளது குறித்து டி.ஆர்.பி.யில் எழுத்து மூலமாக முறையிடப்பட்டது. இதை ஏற்று சரியான விடைப் பட்டியலை டி.ஆர்.பி., இதுவரை வெளியிடவில்லை. மாறாக, தேர்வு முடிவுகள் 10 நாளில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட விடைத்தாள் பட்டியல் படி, விடைத்தாள்கள் திருத்தப்படுமானால், சரியான விடை எழுதிய, எங்கள் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் தேர்வு வாரியம், தனது மவுனத்தைக் கலைத்து, எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 2881 பணியிடங்களுக்கு, ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில், தேர்வில் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் தேர்வாளர்களின் வெற்றியை தீர்மானிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு டி.ஆர்.பி., முடிவெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் தேர்வு எழுதியவர்கள்.

No comments:

Post a Comment