Thursday 22 May 2014

மனதை மயக்கும் மாயப் புதிர்

ரூபிக்ஸ் கியூப் பற்றிக் கேள்விபட்டிருக் கிறீர்களா? மூளைக்கு வேலை தரக்கூடிய சவாலான ஒரு விளையாட்டு. இது எப்படி வந்தது தெரியுமா?
ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியர் எர்னோ ரூபிக் 1974-ல் ஒரு புதுமையான, புதிரான கன சதுரத்தை உருவாக்கினார். இதை உடைக்கவோ பிரிக்கவோ முடியாது. ஆனால், தனித்தனியாகச் சுற்றும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. இதில் வண்ணமயமான ஸ்டிக்கர்களை ஒட்டி இதை ஒரு விளையாட்டுப் பொருளாக்கினார். முதலில் உருவாக்கப்பட்ட ரூபிக் கன சதுரம் (Rubik's Cube) இதுதான்.
ஒரே மாதிரியான நிறங்களை ஒரே பக்கத்தில் கொண்டுவந்து தனது புதிரை விடுவிக்க அவருக்கு ஒரு மாதம் ஆனது. இதன்பின்னர் உலகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் விளையாட்டுப் பொருளாக ரூபிக் கன சதுரத்தை உருவாக்க ஆசைப்பட்டார். ஒரு சில மாற்றங்களை இதில் ஏற்படுத்திய பின்னர் மிகவும் பிரபலமான விளையாட்டுப் பொருளானது ரூபிக் கன சதுரம்.
முதலில் தன் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் இதை அறிமுகப்படுத்தினார். முதன் முதலில் பொலைட்செனிகா என்னும் நிறுவனம் ரூபிக் கன சதுரத்தைத் தயாரித்து விநியோகித்தது.
தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட ரூபிக் கன சதுரம் ‘மாஜிக் க்யூப்’ என அழைக்கப்பட்டது. எடையும் இரு மடங்கு அதிகமாக இருந்தது. ஹங்கேரியில் பிரபலமாகியிருந்த இந்த ரூபிக் கன சதுரத்தைக் கணித அறிஞர்கள் உலகெங்கும் நடைபெற்ற கருத்தரங்குகளுக்குக் கொண்டுசென்றனர்.
1979-ல் நுரெம்பெர்க் விளையாட்டுப் பொருள் கண்காட்சியில் இது இடம்பெற்றது. அப்போது அங்கே வந்திருந்த டாம் க்ரெமெர் என்னும் விளையாட்டுப் பொருள் நிபுணர், உலகம் முழுவதிலும் இதை விற்கச் சம்மதித்தார். இதைத் தொடர்ந்து ஐடியல் டாய் நிறுவனம், மேஜிக் க்யூப் என்னும் பெயரை ரூபிக் நினைவாக ‘ரூபிக் க்யூப்’ என மாற்றி விநியோகித்தது.
1980-ல் இது உலகச் சந்தையில் அறிமுகமானது. அந்த ஆண்டு ஜெர்மனியின் சிறந்த விளையாட்டுக்கான விருதைப் பெற்றது. உலகத்தில் இதுவரை விற்பனையான ரூபிக் கன சதுரத்தின் எண்ணிக்கை 35 கோடி என்கிறார்கள். இன்று உலகத்தில் மிக அதிகமான விற்பனையாகும் விளையாட்டுப் பொருளும் இதுதான். 40 ஆண்டுகளைத் தாண்டியும் வெற்றிநடைபோடுகிறது இந்தக் கன சதுரப் புதிர்.
(ரூபிக்ஸ் கியூப் கண்டுபிடித்து மே 19 அன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்தன)

No comments:

Post a Comment