தனிநபர் சேகரிப்பு
ஹைதராபாத்தில் 1951-ல் தொடங்கப்பட்ட சாலர் ஜங் அருங்காட்சியகம் உலகிலேயே தனிநபர் ஒருவர் சேகரித்த மிக அதிகமான அரும்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகம். இந்தியாவிலுள்ள மூன்றாவது பெரிய அருங்காட்சியகம். ஹைதராபாத் ஏழாவது நிஸாமாக இருந்த நவாப் மீர் யூசுப் அலி கானுடைய இந்தச் சேகரிப்பு திவான் தியோதி அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஜன்னல்கள்
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள ஹவா மஹால் என்ற ஆயிரக்கணக்கான ஜன்னல்கள் கொண்ட பிரம்மாண்ட அரண்மனையில் அமைந்துள்ளது ஹவா மகால் அருங்காட்சியகம். இந்த அரண்மனையைத் தூரத்தில் இருந்து பார்த்தால், தேன்கூட்டைப் போலிருக்கும். இதற்கு அருகே ஜந்தர் மந்தர் என்ற புகழ்பெற்ற, பழமையான வானியல் ஆராய்ச்சி மையமும் உள்ளது.
2 லட்சம்
டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் உள்ளன.
3 நாள் ஆகும்
கொல்கத்தாவில் உள்ள இந்தியன் அருங்காட்சியகம்தான் இந்தியாவின் மிகப் பழமையான, மிகப் பெரிய அருங்காட்சியகம், 1814-ல் கட்டப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து முடிக்க மட்டும் 3 நாட்கள் ஆகுமாம்.
வரவேற்பு அருங்காட்சியகம்
தற்போது சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் மும்பை அருங்காட்சியகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வேல்ஸ் இளவரசரை வரவேற்க 1922-ல் கட்டப்பட்டது. இந்த அருங்காட்சியகத்துக்கு அருகேயுள்ள கேட்வே ஆஃப் இந்தியா, பிரிட்டன் அரசர் ஐந்தாம் ஜார்ஜை வரவேற்கக் கட்டப்பட்டது.
ரவிவர்மா ஓவியங்கள்
சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகம் இந்தியாவில் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம், 1851-ல் அமைக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு வெளியே மிக அதிகமான ரோமானிய அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம். ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களும் இங்கு உள்ளன.
ஆசியாவில் பழமை
தஞ்சையில் உள்ள சரபோஜி மகால் நூலகம், ஆசியாவில் உள்ள பழமையான நூலகம், அருங்காட்சியகம். இங்கு தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி மொழிகளில் எழுதப்பட்ட பனையோலைச் சுவடிகள் உள்பட 60,000 தொகுதிகள் உள்ளன.
இரண்டாவது பெரியது
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம், புதுக்கோட்டையில் உள்ளது.
புகை இன்ஜின்கள்
ஐ.சி.எஃப். எனப்படும் சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திய ஓடிய புகைவிடும் ரயில் இன்ஜின்கள் உட்பட நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சேகரிப்புகள் உள்ளன.
காட்டு அருங்காட்சியகம்
கோவை ஆர்.எஸ். புரம் அரசு வனக் கல்லூரி வளாகத்தில் உள்ள காஸ் வன அருங்காட்சியகம், 1915-ல் தொடங்கப்பட்டது. காட்டு ஆயுதங்கள், காட்டுப் பொருள்கள், மரம் வெட்டும் தொழில், மரக் கைவினைக் கலை, விலங்குகள், பறவைகளின் முட்டைகள், சிசுக்கள், எலும்புக்கூடுகள் இங்கு உள்ளன. கோவை முன்னாள் வனப் பாதுகாவலர் காஸ் சேகரித்த அரும்பொருட்கள் என்பதால், அவரது பெயராலேயே இந்த அருங்காட்சியகம் அழைக்கப்படுகிறது.