Friday 16 May 2014

பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை: பிரதமராகிறார் மோடி

மத்தியில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராகிறார் நரேந்திர மோடி.
மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, இரவு 9 மணி நிலவரப்படி 335 தொகுதி வசப்படுத்துகிறது.
மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்றச் சூழலில், பெரும்பான்மைக்கும் 10-க்கும் அதிகமாக இடங்களைக் கைப்பற்றுகிறது பாஜக. அதாவது, அக்கட்சி 283 இடங்களை வசப்படுத்துகிறது.
இதனால், மத்தியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றியே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிமைக்கும் பலத்தை பாஜக பெற்றுள்ளது.
'1984-ல் இரண்டே இடங்கள்... 2014-ல் தனிப் பெரும்பான்மை' என்ற மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது பாஜக.
தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணியே பெரும்பான்மை பெறும் என்று கூறின. ஆனால், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
நரேந்திர மோடி வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் இந்தத் தேர்தல் படுதோல்வியைச் சந்திக்கிறது.
வதோதராவில் வெற்றி உரையாற்றிய மோடி, இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்று பேசினார். நாட்டை மறுகட்டமைப்பதே தனது பணி என்றார்.
காங்கிரஸ் படுதோல்வி
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 61 இடங்களை மட்டும் வெல்லும் நிலையில் இருக்கிறது. காங்கிரஸ் தனித்து 46 இடங்களை மட்டுமே வெல்லும் நிலை ஏற்பட்டது.
இந்தத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கூறினர்.
இதர கட்சிகளிடம் 147 இடங்கள் உள்ளன. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் அதிமுக 37 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 34 இடங்களையும் வசப்படுத்தின.
பத்து ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும், மோடி அலையுமே இந்த மாற்றத்துக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment