Monday 5 May 2014

மாறாத வடுக்களை தந்த குற்றப்பழங்குடிச் சட்டம்: மே 4- நூற்றாண்டு தினம்

மே 4 - குற்றப்பழங்குடி சட்டத்தின் முதல் ரேகை பதிக்கப்பட்ட நாள். தமிழகத்தில் இந்தச் சட்டம் பிரயோ கிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு நிறைவடைந்திருக்கிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது ஆக்டபஸ் ஆதிக்கத்தை வியாபித் துப் போட்டிருந்த நாடுகளில் எல்லாம் அங்குள்ள ஆதிக்ககுடி களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் சி.டி. ஆக்ட் (Criminal Tribals Act 1023) என்று சொல்லப்படும் குற்றப் பழங்குடிச் சட்டம். பொடா, தடா சட்டங்களைவிட கொடுமையான சட்டம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.
1871-ல் இந்தச் சட்டத்தை பிரயோ கிக்க ஆரம்பித்தது வெள்ளையர் அரசாங்கம். இந்தியாவில் இந்தச் சட்டம் 1911-ல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் 1914-ம் ஆண்டு மே 4-ம் தேதி குற்றப் பழங்குடிச் சட்டம் முதல்முறையாக பிரயோகிக்கப் பட்டது. இந்தியாவில் மொத்தம் 537 சாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் ஏவப்பட்டது. தமிழகத்தில் இந்தப் பட்டியலில் இருந்த சாதிகளின் எண்ணிக்கை 79.
நாடோடிகளாக இருப்பவர்கள், விவசாயம் செய்யாதவர்கள், அடிக் கடி குற்றச் செயல்களில் ஈடுபடுகிற வர்கள், கால்நடைகளை வளர்க்காத வர்கள், அரச பரம்பரையில் வந்தவர் கள் என சொல்லிக் கொண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடு படுகிறவர்கள், ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களை நடத்தி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுபவர்கள் எல்லாம் குற்றப் பழங்குடியினர் என பட்டியல் போட்டிருந்தது பிரிட்டிஷ் அரசு.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி, சொறிக்கான்பட்டி, பூசலபுரம், மேலஉரப்பனூர் ஆகிய ஊர்களில் இருந்த பிரமலைக் கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள் மீதுதான் முதன்முதலாக குற்றப் பழங்குடிச் சட்டம் பாய்ந்தது. இந்தச் சட்டத்தின்படி, 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இரவானதும் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது தாலுகா அலுவலகத்தில் போய் தங்கிவிட வேண்டும். அங்கே ‘ஏ’ ரிஜிஸ்டர், ‘பி’ ரிஜிஸ்டர் என இரண்டு பதிவேடுகள் இருக்கும். இரவில் தங்க வரும் ஆண்கள், ‘ஏ’ ரிஜிஸ்டரில் ஒவ்வொரு நாளும் கைநாட்டு வைக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூர் செல்ல நேரிட்டால், அந்தப் பகுதி கர்ணத்திடம் ராதாரிச் சீட்டு என்ற ஒப்புகைச் சீட்டு பெற்று, அதை ‘பி’ ரிஜிஸ்டரில் பதிவு செய்த பிறகே செல்ல முடியும்.
மணமகனாக இருந்தாலும், திருமணத்தன்று இரவு வீட்டில் தங்க முடியாது. கட்டாயம் போலீஸ் ஸ்டேஷனில் போய் படுத்துவிட வேண்டும். பெற்றவர்களோ உடன் பிறந்தவர்களோ செத்துக் கிடந்தால் கூட இரவில் வீட்டில் தங்கக் கூடாது. இரவில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் சோதனை என்ற பெயரில் ஆண்களை படுத்தி எடுத்தது வெள்ளைக்கார போலீஸ். அந்த அளவுக்கு கொடூரமான சட்டமாக இருந்தது குற்றப் பழங்குடிச் சட்டம்.
1920 ஏப்ரல் 3-ல் இந்தச் சட் டத்தை எதிர்த்து உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கிளர்ச்சி வெடித்தது. ‘‘நாங்கள் நாடோடிகள் இல்லை; விவசாயம் செய்து பிழைக்கிறோம். எனவே, குற்றப்பழங்குடிச் சட்டம் எங்களுக் குப் பொருந்தாது’’ என கைநாட்டு வைக்கச் சொன்ன அதிகாரிகளோடு மல்லுக்கு நின்றார்கள் மக்கள். அது மோதலாக வெடித்ததால் அந்த மக்கள் மீது 152 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீஸ். இதில் மாயக்காள் என்ற பெண் உள்பட 17 பேர் பலியாகி னர். 750 பேரை கைது செய்தது போலீஸ். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, குற்றப் பழங்குடிச் சட்டத்தின் குரூரம் இன்னும் அதிகமானது.
இந்தச் சட்டத்தை நீக்க மேற் கொள்ளப்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் எல்லாம் பயன் தராத நிலையில், 1937-ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்ட மன்றத் தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குற்றப்பழங் குடிச் சட்டத்தை நீக்குவோம்’என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தது காங்கிரஸ். ஆனாலும் 1948-ல் சுதந்திர இந்தியாவில்தான் அந்தச் சட்டம் அகற்றப்பட்டது.

No comments:

Post a Comment