Friday 9 May 2014

25% இடஒதுக்கீடு அமலாவதை கண்காணிக்க குழு

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் தினசரி ஆய்வுசெய்ய வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்கள் மற்றும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான கல்விக்கட்டணத்தை (அரசு நிர்ணயித்த கட்டணம்) அந்த பள்ளிகளுக்கு அரசு வழங்கும்.
இந்த சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 3,890 தனியார் பள்ளிகளில் 50,876 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கான கட்டணத்தை அரசு தங்களுக்கு வழங்காததால் 2014-15-ம் கல்வி ஆண்டில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் அறிவித்தன. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தங்கள் முடிவை தனியார் பள்ளிகள் வாபஸ் பெற்றன. மாணவர்களைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:-
தனியார் பள்ளிகள் 25 சதவீத இடஒதுக்கீட்டை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட் டத்திலும் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் (ஐ.எம்.எஸ்.) தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புகார் செய்தால் நடவடிக்கை
25 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்து தினசரி அறிக்கை அனுப்புமாறு கண் காணிப்பு குழுவினர் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். 25 சத இடஒதுக்கீட்டில் சேருவதற்கான விண்ணப்ப படிவங் களை தராத பள்ளிகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அனைத்து ஐ.எம்.எஸ். அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளியில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஐ.எம்எஸ். அலுவலகத்திலேயே சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு பிச்சை கூறினார்.

No comments:

Post a Comment