Wednesday, 9 October 2013

அரசு சேவைகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை


அரசு சேவைகளை பெற 'ஆதார்' அட்டை அவசியமில்லை: மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

'அரசின் அத்தியாவசிய சேவைகளை பெற, 'ஆதார்' அடையாள அட்டை அவசியமில்லை. இது தொடர்பாக, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், எந்த மாற்றமும் செய்ய முடியாது' என, கூறிய சுப்ரீம் கோர்ட், மத்திய அரசின் மனுவை, தள்ளுபடி செய்துள்ளது.

12 இலக்க எண்:

உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், 12 இலக்கங்களை உடைய, ஆதார் அடையாள எண் வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, நந்தன் நீல்கனி தலைமையில், தனியாக ஆணையம் அமைக்கப்பட்டது. இதன்படி, அனைத்து மாநிலங்களிலும், பிரத்யேக எண் அடங்கிய, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 'மத்திய அரசின் நேரடி மானியம் மற்றும் சலுகைகளை பெற, ஆதார் அடையாள அட்டை அவசியம்' என, மத்திய அரசு அறிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு:

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், சமையல் காஸ் சிலிண்டர் மானியம், திருமண பதிவு, ஓய்வூதியம் ஆகியவற்றை பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை கேட்கப்பட்டது. இதை எதிர்த்து, சில அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'அரசின் அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை' என, உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மத்திய அரசு மற்றும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட் உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த திட்டத்துக்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை, மக்கள் பெறுவதற்கு, இதைவிட பொருத்தமான, வேறு அடையாள அட்டை எதுவுமில்லை' என, கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நீதிபதிகள் உத்தரவு:

அரசின் அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஆதார் அடையாள அட்டையால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. இந்த திட்டத்தை கட்டாயமாக்குவதற்கு, அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழியும் உங்களுக்கு (அரசுக்கு) உள்ளது. அப்படி, அவசர சட்டம் பிறப்பித்தால், இந்த வழக்கு பொருத்தமற்றதாகி விடும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதற்கிடையே, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்துக்கு, சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.

No comments:

Post a Comment