Tuesday 14 October 2014

காஷ்மீர் பெண் போலீஸுக்கு ஐ.நா.வின் சர்வதேச அமைதிக் காப்பாளர் விருது

ஆப்கானிஸ்தானில் பணியில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தேவிக்கு, ஐ.நா.வின் சர்வதேச அமைதி காப்பாளர் (பெண் போலீஸ் பிரிவு) விருது வழங்கப்பட்டுள்ளது.
அமைதிக் காக்கும் பணிகளில் தன்னிகரற்ற சாதனைக்காக, சக்தி தேவிக்கு இந்த விருது, கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற 52-வது சர்வதேச பெண் போலீஸார் மாநாட்டில் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தீவிரவாதம், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஐ.நா. அமைதிப்படையினர் ஈடுபடுவர். உலகின் 69 நாடுகளில் சர்வதேச நாடுகளின் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் பணியில் உள்ளனர். அதில், 43 நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ராணுவத்தினர், போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நா. அமைதிப்படையில் சிறப்பாக பணியாற்றும் ராணுவத்தினர், போலீஸாருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2014-ம் ஆண்டின் ஐ.நா. அமைதி விருது, காஷ்மீரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
'ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அமைதிக் காப்பாளர் படையில் செயல்பட்டு வரும் சக்தி தேவி, அந்நாட்டில் அமைதியைப் பேணும் வகையில், மனித உரிமைகள் பாதுகாக்க சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அத்துடன், ஆப்கானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, அவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுத்தற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது' என்று ஐ.நா.வின் போலீஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment