Wednesday 15 October 2014

தகவல் உரிமைச் சட்டத்தை அணுக வேண்டாம்: யூ.பி.எஸ்.சி.

மத்திய அரசுப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு எழுதுபவர்கள், தேர்வு முடிவுகளை அறிய தகவல் உரிமைச் சட்டத்தை அணுக வேண்டாம் என்று யூ.பி.எஸ்.சி. கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து யூ.பி.எஸ்.சி. மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகள் மீதான பணி நியமன நடைமுறைகள் முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல்களை இணையதளத்தில் வெளியிடுவோம்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் மதிப்பெண் விவரங்களையும் யூ.பி.எஸ்.சி வெளியிடும். இருப்பினும், தகவல் உரிமைச் சட்டத்தை அணுகி பலர் தேர்வு முடிவுகளைக் கோருகின்றனர்.

மேலும், மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள், சிவில் சர்விசஸ் முதல் நிலை தேர்வுக்கான விடைகள் அனைத்தும் இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று தேர்வு எழுதியவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். 

எனவே, தகவல் உரிமைச் சட்டத்தை அணுகுவது என்பதை ஊக்குவிக்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

2014-ஆம் ஆண்டு சிவில் சர்விசஸ் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment