Wednesday 15 October 2014

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிக்கான செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியுடன், பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
முன்னதாக இதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுண் அக்டோபர் 13-ம் தேதி காலை 6.32 மணிக்கு தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து ஆகியவற்றை கண்காணிக்கவும், ஜி.பி.எஸ் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2013 ஜூலை 1-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஏவும், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பியும் விண்ணில் செலுத்தப்பட்டன.
மூன்றாவது செயற்கைக் கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ராக்கெட், கடந்த 10-ம் தேதி அதிகாலை 1.56க்கு விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேதி குறிப்பிடாமல் ராக்கெட் விண்ணில் செலுத்தும் திட்டத்தை விஞ்ஞானிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று (16-ம் தேதி) ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன் மொத்த எடை 1425.4 கிலோ. இந்த செயற்கைக்கோள் காலம் 10 ஆண்டுகளாகும்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைக்கோள் கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை, வாகனங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள் விண்ணில் உள்ள புவி வட்ட பாதையில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிமீ தூரத்திலும், அதிகபட்சமாக 20,650 கிமீ தூரத்திலும் நிலைநிறுத்தப்படவுள்ளது.
அமைச்சர் பாராட்டு:
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை மத்திய அறிவியல், தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டவுடன், "இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நேரில் காணும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இந்தியா, உலக வல்லரசாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், விண்வெளித் துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு இணையாக உருவெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment