Thursday 19 June 2014

தபால் தலையில் ராணியின் தலை

இன்று தகவல் தொடர்பு எவ்வளவோ வளர்ந்து விட்டது. நினைத்த நேரத்தில் நாம் ஒருவருடன் தொடர்புகொள்ள முடிகிறது. செய்திகளை அனுப்ப முடிகிறது. அதற்குத் தொலைபேசி, மொபைல் போன், ஈ - மெயில் போன்றவை உதவுகின்றன. இந்த வசதிகளில் ஒன்றுகூட இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கடிதம் மூலமாகத் தொடர்புகொள்வார்கள்.
கடிதங்களின் எடைக்கு ஏற்ப தபால் தலை (ஸ்டாம்ப்) ஒட்ட வேண்டும். ஸ்டாம்ப் இல்லாத கடிதங்களுக்கு அபராதம் உண்டு. இல்லையென்றால் பெறுபவரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். கடிதங்களில் ஒட்டப்படும் பலவித ஸ்டாம்ப்புகளை முன்பெல்லாம் பலர் போட்டி போட்டு சேகரிப்பார்கள். அதுவும் வெளிநாட்டு ஸ்டாம்ப்புகளை வைத்திருப்பவர்களுக்கு நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். சரி, இந்த ஸ்டாம்ப் முறை எப்படி, எப்போது வந்தது தெரியுமா?
முதல் தபால் சேவை
தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது சிரமமாக இருந்தது. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் வில்லியம் டோக்ராவும் அவருடைய நண்பர் ராபர்ட்டும் இணைந்து ‘லண்டன் பென்னி போஸ்ட்’ என்ற நிறுவனத்தை லண்டனில் தொடங்கினார்கள். ஒரு பென்னி பணத்தைப் பெற்றுக்கொண்டு கடிதங்களையும், சின்னச் சின்ன பார்சல்களையும் அவர்கள் டெலிவரி செய்தார்கள். உலகின் ஓரளவுக்கு மேம்படுத்தப்பட்ட முதல் தபால் சேவை இதுதான் என பல வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
கடிதம் வந்தால் காசு போகும்
ஆரம்ப காலத்தில் முன்பணம் செலுத்திக் கடிதம் அனுப்பும் முறை இல்லை. கடிதம் சம்பந்தப்பட்டவரிடம் டெலிவரி செய்யப்பட்ட பிறகே பணம் வசூலிக்கப்பட்டது. அதுவும் யார் கடித்தத்தைப் பெறுகிறார்களோ அவரிடம் இருந்து பணம் பெறப்பட்டது. இந்த அணுகுமுறை தபால் சேவைக்கு நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தியது. காரணம் கடிதம் பெறுகிறவர்களில் பலர் பணம் தர மறுத்தார்கள். மேலும் கடிதத்தின் எடையிலும் அளவிலும் எந்த ஒழுங்கும் இல்லாததால் பலர் பலப்பல அளவில் கடிதங்களை அனுப்பினார்கள்.
தபால் தலை அறிமுகம்
தபால் துறை சந்தித்த இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சர் ரோலண்ட் ஹில். தபால் துறை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவரும் இவரே. நாடு முழுவதும் ஒரே மாதிரியான ‘ஃபோர் பென்னி போஸ்ட்’ என்கிற தன் திட்டத்தை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முன்வைத்தார். ஒரு வழியாக 1839-ம் ஆண்டு அது நடைமுறைக்கும் வந்தது. உலகின் முதல் தபால் தலையான ‘பென்னி பிளாக்’ (Penny Black), 1840-ம் ஆண்டு அறிமுகமானது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து ‘டூ பென்ஸ் ப்ளூ’ (Two-pence Blue) என்கிற தபால் தலை விற்பனைக்கு வந்தது.
கறுப்பில் இருந்து சிவப்புக்கு
இந்த இரண்டு தபால் தலைகளிலும் இளவயது விக்டோரியா மகாராணியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. ஸ்டாம்ப் கறுப்பு நிறத்தில் இருந்ததால் அதில் எழுதுகிற குறிப்புகள் தெளிவாகத் தெரியவில்லை. அதனால் 1841-ம் ஆண்டில் இருந்து சிவப்பு நிறத்தில் தபால் தலைகள் வெளியாகின. இங்கிலாந்தைத் தொடர்ந்து உலகின் மற்ற நாடுகளிலும் மெது மெதுவாகத் தபால் தலைகள் அறிமுகமாகின. ஸ்விட்சர்லாந்து Zurich 4 and 6 ஸ்டாம்ப்பையும் பிரேசில் Bull's Eye ஸ்டாம்ப்பையும் வெளியிட்டன.
இந்தியாவில் 1854-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தபால் தலைகள் அறிமுகமாகின. அரையணா, ஓரணா, இரண்டணா, நாலணா ஆகிய நான்கு விலைகளில் அவை விற்பனைக்கு வந்தன. நாலணா ஸ்டாம்ப்புகள் நீலமும் சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். உலகின் முதல் இரு நிற ஸ்டாம்ப்பும் இதுதான். இவற்றிலும் விக்டோரியா மகாராணியின் உருவமே பொறிக்கப்பட்டது. இவை கொல்கத்தாவில் வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டன.
அதன் பிறகு உலகத் தலைவர் களின் படங்களும், ஒவ்வொரு நாட்டின் தேசிய சின்னங்களும், முக்கிய நிகழ்வுகளும் தபால் தலையில் இடம் பெற்றன.
தபால் தலைகள் அறிமுகத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் கடிதப் பயன்பாடு அதிகரித்தது. 20-ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும்கூட கடிதங்கள் நடைமுறையில் இருந்தன.
தற்போது ஈ - மெயிலும், தொலைபேசியும் கடிதப் பயன்பாட்டைக் குறைத்து விட்டன. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாகப் பழக்கத்தில் இருந்த நடைமுறையை நாம் ஏன் தொலைக்க வேண்டும்? பள்ளியில் விடுமுறை விண்ணப்பமும், கடிதமும் எழுதக் கற்றுத் தந்திருப்பார்கள் அல்லவா. அதனால் நேரம் கிடைக்கும்போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதலாமே. அது உறவையும் நட்பையும் நிச்சயம் வலுப்படுத்தும்.

No comments:

Post a Comment