உணவுப் பொருட்களின் விலை உயர்வு, காபி, தேநீர் போன்ற பானங்கள் விலை மற்றும் மீன், காய்கறி விலைவாசி உயர்வால் பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் மொத்த விற்பனை விலை அளவின்படி கணிக்கப்பட்ட பணவீக்கம் 4.58% ஆக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டு மே மாதத்தில் உணவு பணவீக்கம் 6.01% ஆக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 6.4% ஆக இருந்த பணவீக்கம் 5 மாதங்களுக்குப் பிறகு இந்த மாதம் கடுமையாக உயர்ந்துள்ளது.
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில்: கடந்த மாதம் காபி விலை 23%, கோழி விலை 7%, மீன் விலை 6%, டீ, பழங்கள், காய்கறிகள் விலை 4% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வாலேயே பணவீக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருள்களின் விலை குறைந்து, பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய நிதித் துறைச் செயலர் அரவிந்த் மாயாராம் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.