கத்தாரில் நடந்து வரும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு கூட்டத்தில் நேற்று இந்தியாவின் ‘கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா’ மதிப்பு மிக்க உலக பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்பட்டது.
கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 15-ம் தேதி முதல் உலகின் முக்கிய பாரம்பரியச் சின்னங்களை தேர்வு செய்யும் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா மற்றும் குஜராத்தின் ‘ராணி - கி - வாவ் படித்துறைக் கிணறு ஆகியவை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ளது என்று ‘தி இந்து’ கடந்த ஜூன் 10ம் தேதி அன்று முதன்முறையாக செய்தி வெளியிட்டது. சொன்னது போலவே மேற்கண்ட இரண்டை யும் உலகப் பாரம்பரியச் சின்னங் களாக அறிவித்தது யுனெஸ்கோ.
நேற்று மதியம் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு குழுவின் தலைவரான திருமதி ஷேக்கியா அல் மயாஸா பிந்த் ஹாமாத் காலிஃபா அல்தானி, மேற்கு இமயமலையில் இருக்கும் கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவின் சிறப்புகளை பட்டியலிட்டார். அவர் கூறுகையில், “கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவின் உலகில் வேறு எங்கும் வசிக்காத ஓரிட வாழ்விகளும், தனித்துவம் பெற்ற தாவரங்களும் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன. அதேவேளையில் உள்ளூர் பழங்குடியின மக்களின் நலனிலும் இந்திய அரசு சிறப்பான கவனத்தை செலுத்தி வருகிறது. நீர்வளங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
தொடர்ந்து அவர் இந்தியா சார்பாக தேர்வு செய்யப்படவுள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க யாருக் கேனும் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடு களின் உறுப்பினர்கள் சில கேள்வி களையும் சந்தேகங்களையும் எழுப்பினர். இந்திய அதிகாரிகள் தரப்பில் அதற்கு விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து, நேற்று மதியம் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் நிகழ்ச்சியில் இந்தியாவுக்காக யுனெஸ்கோ தூதர் திருமதி ருச்சிரா கம்போஜ், மத்திய கலாச்சாரத் துறை செயலாளர் ரவீந்திர சிங், ஹிமாச்சல பிரதேசத்தின் வனத்துறை அதிகாரிகள் ஆர்.கே. குப்தா, லலித் மோகன், சஞ்சீவ பாண்டே மற்றும் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் வி.பி. மாத்தூர் ஆகியோர் கலந்துகொண்டு யுனெஸ்கோ தேர்வு குழுவினருக்கு நன்றியை தெரிவித்தனர்.
வி.பி. மாத்தூர் கூறுகையில், “இந்தியாவின் பெருமைகளில் ஒன்று கூடியிருக்கிறது. இதன் மூலம் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா மட்டுமின்றி மேற்கு இமயமலையின் உயிரி பல் வகைமை உலகத்தின் கவனத்தைப் பெறுகிறது.” என்றார்.
இந்தியாவின் ஏழு அதிசயங்கள்
1985 காசிரங்கா தேசியப் பூங்கா, அஸ்ஸாம் மானஸ் வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாம் கியோலேடியோ தேசியப் பூங்கா, ராஜஸ்தான்
1987 சுந்தரவனக் காடுகள், மேற்கு வங்காளம்
1988 நந்தாதேவி தேசியப் பூங்கா, உத்தரகண்ட்
2012 மேற்குத் தொடர்ச்சி மலைகள்
2014 கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா
ராணி-கி-வாவ் படித்துறையும் தேர்வு
கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் கலாச்சார பிரிவில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ‘ராணி கி - வாவ்’ படித்துறை கிணற்றை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளது. மரூ-குர் ஜாரா வம்சத்தினரால் கட்டப்பட்ட இந்த கிணறு கட்டிடக் கலைக்கு பிரசித்தி பெற்றது. சரஸ்வதி நதி அழிந்தபோது இதுவும் பூமிக்குள் புதையுண்டிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இது சுமார் 700 ஆண்டுகள் கழித்து இந்திய தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஏழு அடுக்குகள் கொண்ட இந்த படித்துறையின் ஒவ்வொரு அடுக்கிலும் அழகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.
இதுதவிர, கலாச்சார பிரிவில் ஏற்கெனவே மகாபலிபுரம், கோனார்க் சூரியக் கோயில், தாஜ்மகால் உட்பட மொத்தம் இந்தியாவில் உள்ள 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருச்சி ரங்கம் கோயில், காரைக்குடி செட்டிநாடு கிராமம், திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் உட்பட48 இடங்கள் யுனெஸ்கோவின் உத்தேச தேர்வுப் பட்டியலின் பரிசீலனையில் இருக்கின்றன.