சாலிம் அலி நினைவு நாள்: ஜூன் 20
இந்தியப் பறவைகள், பறவையியல் என்று கூறியவுடன் பலருக்கும் நினைவுக்கு வரும் முதல் பெயர் சாலிம் அலி.
(அவரது பெயர் சலிம் அலி அல்ல. தனது பெயரின் ஆங்கில ‘ஏ’ எழுத்துக்கு மேல் ஒரு மேல்கோடிட்டு, தனது பெயரை சாலிம் என்றே உச்சரிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்)
சின்ன வயதில் தோட்டத்துக்கு வந்த பறவைகளை நோக்குவதில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. வளர்ந்து முனைவர் பட்டம் பெற்ற பின் இந்தியா, பாகிஸ்தான், திபெத், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பறவை நோக்குவதற்காகச் சென்றார். மியான்மர் எனப்படும் பழைய பர்மாவில், அவரது குடும்பத்தினர் வெட்டு மரத் தொழில், சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். அங்குச் சென்று தொழிலைக் கவனிக்காமல், தனது சகோதரரிடம் இருந்த மட்டக்குதிரையை (குட்டைக் குதிரை - Pony) வாங்கிக்கொண்டு காடுகளுக்குச் சென்றார். அங்கிருந்த பறவைகளை ஆர்வத்துடன் நோக்கத் தொடங்கினார்.
பறவை காதல்
அப்போது முதல் தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கு மேல் காடுகளிலேயே தங்கி, பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார் சாலிம். எப்போதும் கையில் ஒரு நோட்டுப் புத்தகம், பைனாகுலர் எனப்படும் இருநோக்கியை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பறவைகளைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. கால்நடையாகவே அவர் காடுகளுக்குள் அலைந்தார். அவரது பணி மிகக் கடினமாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தது.
காடுகளைக் காத்தவர்
இந்தியாவின் பல்வேறு காடுகள் காக்கப்படச் சாலிம் முக்கியக் காரணம். கேரளத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு காடுகளும், ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயமும் காப்பாற்றப்பட அவரது முயற்சியும் ஒரு காரணம். அவர் எழுதிய ‘இந்தியப் பறவைகள்' என்ற புத்தகம் இந்தியாவில் எழுதப்பட்ட முதல் பறவைகள் வழிகாட்டிப் புத்தகம். தனது வாழ்க்கை வரலாற்றை ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற பெயரில் அவர் எழுதியுள்ளார்.
மதிப்புமிக்க நிறுவனம்
சிறு வயதில் தான் சுட்ட மஞ்சள் தொண்டைச் சிட்டு பற்றி தெரிந்துகொள்ள எந்த நிறுவனத்துக்குச் சென்றாரோ, அதே மும்பை பி.என்.எச்.எஸ். நிறுவனத்தின் தலைவராகச் சாலிம் அலி பிற்காலத்தில் உயர்ந்தார்.
அந்த நிறுவனத்தை முழு வீச்சில் ஆராய்ச்சியில் ஈடுபடச் செய்ததில், அவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இன்றைக்கும் அந்த நிறுவனம் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பெரிய அளவில் மதிக்கப்படுகின்றன.
சாலிம் அலி பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய காலத்தில் அவருக்குப் பெரிய பண உதவியோ, உதவியாளர்களோ, ஏன் இந்தியப் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சி குறிப்புகளோகூட அதிகமில்லை.
ஆனாலும் இந்தியப் பறவைகளை ஆராய்வதில் அவர் உறுதியாக இருந்தார். இன்றைக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் மதிக்கப்படும் பறவையியலாளராக அவர் திகழ்கிறார் என்றால், அதற்கு அவரது மனஉறுதியே காரணம்.