Wednesday 23 October 2013

உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகள் நியமனம்


வரும் 25ம் தேதி பதவி பிரமாணம்

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு, புதிதாக, ஏழு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இம்மாதம், 25ம் தேதி, பதவியேற்கின்றனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், மகாதேவன், சொக்கலிங்கம், ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், முதல் ஐந்து பேர், வழக்கறிஞர்கள்; மற்ற இருவரும், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றியவர்கள். பி.என்.பிரகாஷ்: சென்னையில் பிறந்தார். திருவல்லிக்கேணி, இந்து சீனியர் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை பல்கலையில், பி.ஏ., பட்டம், சென்னை சட்டக் கல்லூரியில், சட்டப் படிப்பு முடித்தார். 1984ல், பார் கவுன்சிலில் பதிவு செய்தார். போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழான வழக்குகளில், அரசு தரப்பில் ஆஜராக, சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ., - டி.ஆர்.ஐ., சுங்கத் துறைகளுக்காக, சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2006ல் இருந்து, சுப்ரீம் கோர்ட், உயர்நீதிமன்றங்களில் 'பிராக்டீஸ்' செய்கிறார்.

புஷ்பா சத்தியநாராயணா:

மறைந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.பத்மநாபனின் மகள். 1960ல் பிறந்தார். தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர். சென்னையில், பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், சட்டப் படிப்பு முடித்தார். 1985ல், பார் கவுன்சிலில் பதிவு செய்தார். மூத்த வழக்கறிஞரான மறைந்த டி.ஆர்.ராமச்சந்திரன் அலுவலகத்தில், சூபிராக்டீஸ்' துவங்கினார். மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலனின் ஜூனியராக இருந்தார். வழக்கறிஞராக, 28, ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

கல்யாணசுந்தரம்:

ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள, மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். 1960ல் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெறறார். 1986ல், வழக்கறிஞராக பதிவு செய்தார். மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், மறைந்த வழக்கறிஞர் செங்கோட்டையனிடம், ஜூனியராக பணியாற்றினார். 1991ல் இருந்து, தனியாக, சூபிராக்டீஸ்' செய்து வருகிறார்.

வைத்தியநாதன்:

கோவையில், 1962ல் பிறந்தார். சென்னையில் பள்ளி படிப்பு, பட்டப் படிப்பு, சட்டப் படிப்பு முடித்தார். 1986ல், பார் கவுன்சிலில் பதிவு செய்தார். வழக்கறிஞர் வைகையின், ஜூனியராக இருந்தார். பி.எப்., - இ.எஸ்.ஐ., வழக்கறிஞராக, நான்கு ஆண்டுகள் இருந்தார். தொழிலாளர் சட்டங்கள் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது தந்தை, மறைந்த வி.சுப்ரமணியன், சூஷூ' பாலிஷ் விற்பனையாளராக பணியாற்றினார். அவரும், மறைந்த ஜனாதிபதி வெங்கட்ராமன், கே.எஸ்.ஜானகிராமன் ஆகியோர் சேர்ந்து, சென்னை கமர்ஷியல் ஊழியர் சங்கத்தை, 1946ல் துவக்கினர். 

மகாதேவன்:

சென்னையில், 1963ல் பிறந்தார். சென்னையில், பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, சட்டப் படிப்பு முடித்தார். சிவில், கிரிமினல், வரி, சுங்கத் துறை வழக்குகளில் ஆஜராகியுள்ளார். கூடுதல் அரசு பிளீடர், மத்திய அரசு மூத்த வழக்கறிஞராக பணியாற்றியவர். 9,000 வழக்குகளுக்கு மேல், நடத்தியுள்ளார். இவரது தந்தை, மா.ரங்கநாதன், தமிழ் எழுத்தாளர்.

சொக்கலிங்கம்:

தூத்துக்குடியில், 1955ல் பிறந்தார். இவரது தந்தை, வழக்கறிஞர் குமாஸ்தாவாக பணியாற்றினார். தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பு, பட்டப்படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டம், அண்ணாமலை பல்கலையில், எம்.எல்., பட்டம் பெற்றார். 1986ல், மாவட்ட முன்சிப் ஆக நியமிக்கப்பட்டார். பின், மாவட்டங்களில் மாஜிஸ்திரேட், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றினார். உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக பணியாற்றி, சென்னை, முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ரவி:

திருப்பத்தூரில், கூடுதல் மாவட்ட முன்சிப் ஆக நியமிக்கப்பட்டார். 1992ல், சப் ஜட்ஜ் ஆக, பதவி உயர்வு பெற்றார். 1999ல், மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உயர்நீதிமன்றத்தில், விஜிலன்ஸ் பதிவாளராக பணியாற்றினார். 27 ஆண்டுகளுக்கும் மேல், நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். புதிய நீதிபதிகள் அனைவரும், இம்மாதம், 25ம் தேதி, பதவியேற்கின்றனர். இவர்களுக்கு, தலைமை நீதிபதி அகர்வால், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய நீதிபதிகள் பதவியேற்பதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை, 48 ஆக உயர்கிறது. உயர்நீதிமன்ற, தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ள அகர்வால், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, இம்மாதம், 24ம் தேதி, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

No comments:

Post a Comment