Saturday 19 October 2013

குரூப்-1 மெயின் தேர்வில் தமிழ் பாதி, ஆங்கிலம் பாதி எழுத இயலாது

குரூப்-1 மெயின் தேர்வில் தமிழ் பாதி, ஆங்கிலம் பாதி எழுத இயலாது

டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டுப்பாடு – கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு

துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், பத்திரப் பதிவு மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலியிடங்களை நிரப்ப வரும் 25, 26, 27-ம் தேதிகளில் குரூப்-1 மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.

ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற அடிப்படையில் ஏறத்தாழ 1300 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமே தேர்வு மையம் ஆகும்.

அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அடையாறு அவ்வை இல்லம், டி.வி.ராமமூர்த்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட பல மையங்களில் தேர்வு நடக்கிறது.

புதிய கட்டுப்பாடு

இதுவரை மெயின் தேர்வில் கேள்விகளுக்கான விடைகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அல்லது இரு மொழிகள் கலந்தோ பதில் அளிக்கலாம்.

ஆனால் தற்போது, விடைகளை பாதி ஆங்கிலத்திலோ, பாதி தமிழிலோ எழுத முடியாது. ஒன்று முழுமையாக தமிழில் எழுத வேண்டும். இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

மாணவர்களுக்கு பாதிப்பு

மெயின் தேர்வில் பொது அறிவு தொடர்புடைய 3 தாள்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக மாணவர்கள் விடையளிக்கும்போது, சில கேள்விகளுக்கு தமிழில் பதில் எழுதுவதும், சில வினாக்களுக்கு ஆங்கிலத்தில் விடையளிப்பதும் எளிதாக இருக்கும்.

குறிப்பாக, அறிவியல் தொழில் நுட்பம் தொடர்புடைய கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் எழுதுவது வசதியாக இருக்கும். அதே நேரத்தில், பொதுவான விஷயங்கள் தொடர்பான வினாக்கள் எனில் மாணவர்கள் தமிழில் கடகடவென பதில் எழுதிவிடலாம்.


டி.என்.பி.எஸ்.சி கொண்டு வந்திருக்கும் இந்த புதிய கட்டுப்பாடு, தேர்வு எழுதுவோருக்கு, அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே மாணவர்களின் கருத்து.

No comments:

Post a Comment