Monday 28 October 2013

நேர்முகத் தேர்வில் தமிழில் பதில் அளிக்கும் வசதி

மத்திய அரசின் குரூப்-ஏ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல், குரூப்-பி அதிகாரிகளையும், குரூப்-சி பணியாளர்களையும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) தேர்வு செய்கிறது.

பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் கீழ்நிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர், கணக்காளர், ஆடிட்டர், உதவியாளர் போன்ற பணியிடங்களும், வருமான வரி ஆய்வாளர், கடத்தல் தடுப்பு அதிகாரி, அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு அதிகாரி, மத்திய காவல்துறை உதவி ஆய்வாளர், சுங்க இலாகா மற்றும் சென்ட்ரல் எஸ்சைஸ் ஆய்வாளர், இளநிலை பொறியாளர் என 30 விதமான பதவிகள் எஸ்.எஸ்.சி. போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன.

பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 10-ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட தேர்வுகளுக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது.

ஆனால், பட்டப் படிப்பு தகுதியிலான போட்டித் தேர்வுகளுக்கு எழுத்துத் தேர்வுடன் நேர்முகத் தேர்வும் உண்டு. தற்போது நேர்முகத் தேர்வு இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ் உள்ளிட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் நேர்முகத் தேர்வை நடத்துவது குறித்து எஸ்.எஸ்.சி. திட்டமிட்டு வருகிறது.

ஏற்கனவே மெட்ரிக் நிலையிலான எஸ்.எஸ்.சி. தேர்வில் கேள்விகள் மேற்சொன்ன 22 மொழிகளிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வசதியின்படி, நேர்முகத் தேர்வில் கேள்விகள் ஆங்கிலத்தில்தான் கேட்கப்படும். தேர்வர்கள் அவற்றுக்கு தமிழில் பதில் சொல்லலாம்.

அவர்களின் பதில் தேர்வுக் குழுவுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தெரிவிக்கப்படும். இதே நடைமுறைதான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்விலும் பின்பற்றப்பட்டு வருகிறது.


தற்போது, பட்டப் படிப்பு கல்வித் தகுதியிலான தேர்வுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் கொள்குறி வகை (ஆப்ஜெக்டிவ்) முறைக்குப் பதிலாக 2-வது கட்ட தேர்வில் விரிவாக பதில் அளிக்கும் முறையை கொண்டுவருவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.  

No comments:

Post a Comment