Friday 3 May 2013

பாக்., சிறையில் வாடிய சரப்ஜித் சிங் இறந்ததால்.சோகம்: 22 ஆண்டுகளுக்கு பின் பிணமாக இந்தியா வந்தார்


லாகூர் / அமிர்தசரஸ்:செய்யாத குற்றத்திற்காக, 22 ஆண்டுகளாக, பாகிஸ்தான் சிறையில் வாடிய, அப்பாவி இந்தியர், சரப்ஜித் சிங், 49, பிணமாக நேற்று, இந்தியா திரும்பினார். சிறப்பு விமானத்தில், லாகூரிலிருந்து அமிர்தசரஸ் கொண்டு வரப்பட்ட அவரின் உடலை, குடும்பத்தினர், கண்ணீருடன் பெற்றுக் கொண்டனர். சொந்த கிராமத்தில், இன்று இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

பாகிஸ்தானின் லாகூர் நகரில், 1990ல், தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 14 பேர் இறந்தனர். இந்த குண்டுவெடிப்புகளை, இந்தியாவின் உளவு அமைப்பான, ரா தான் செய்திருக்க வேண்டும் என, பாகிஸ்தான் தவறாக கருதியது.

இரு நாடுகளுக்கும் எல்லையில் உள்ள, பஞ்சாப் கிராமம் ஒன்றில் வசித்து வந்த சரப்ஜித் சிங், 27 வயது இளைஞராக இருந்த போது, எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதியில், போதையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரை, இந்திய உளவாளி என, கருதிய பாகிஸ்தான் போலீசார், 1991ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தூக்கு தண்டனை

லாகூர் குண்டு வெடிப்பில், சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு உள்ளது என, குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கருணை மனுக்களை, கோர்ட்டுகளும், அப்போதைய அதிபர் முஷாரப்பும் நிராகரித்தார். 

அதனால் எந்த நேரமும், அவர் தூக்கிலிடப்படலாம் என, எதிர்பார்த்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வந்த, பெனசிர் புட்டோவின், பாகிஸ்தான் மக்கள் கட்சி, சரப்ஜித்தின் தூக்கு தண்டனையை, காலவரையின்றி நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே, கடந்த வாரம், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை, அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ஆறு பாக்., கைதிகள், பலமாக தாக்கியதில், உணர்வற்ற நிலையில், லாகூர் மருத்துவ மனையில் சரப்ஜித் அனுமதிக்கப்பட்டார்.

அவரை சந்திக்கச் சென்ற மனைவி, இரு மகள்கள் மற்றும் சகோதரி, சிகிச்சைக்காக இந்தியா அல்லது பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி, பாக்., அரசை கேட்டுக் கொண்டனர். எனினும், அந்த கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை.

அதிகாலையில் பிரிந்த உயிர்

சரப்ஜித் சிங்கை சந்திக்க, பாக்., சென்றிருந்த உறவினர்கள், நேற்று முன்தினம், அங்கிருந்து நாடு திரும்பிய நிலையில், நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், லாகூர் மருத்துவமனையிலேயே, அவரின் உயிர் பிரிந்தது.

இஸ்லாமாபாத்தில் உள்ள, இந்திய ஐ - கமிஷனர் அலுவலகத் திற்கு, சரப்ஜித் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. டில்லியில் இருந்த, வெளியுறவு செயலர், ரஞ்சன் மத்தாய், பாகிஸ்தான் வெளியுறவு செயலர், ஜலில் அப்பாஸ் ஜிலானியை, போனில் தொடர்பு கொண்டு, சரப்ஜித் சிங் உடலை, ஒப்படைக்க, விரைவான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில், சரப்ஜித் சிங் உடல், ஆறு டாக்டர்களால், நேற்று பகுப்பாய்வு செய்யப்பட்டது. இரண்டு, மணி நேரம் நடைபெற்ற ஆய்வு, பகல், 2:30 மணியளவில் நிறைவடைந்தது. அதன்பின், மாலை, 4:00 மணியளவில், இந்திய அதிகாரிகளிடம், சரப்ஜித் சிங்கின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

சிறப்பு விமானம்

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டிருந்த, ஏர் - இந்தியா சிறப்பு விமானத்தில், சரப்ஜித் சிங் உடல், அமிர்தசரஸ் கொண்டு வரப்பட்டது. சகோதரி தல்பீர் கவுர், மகள்கள் உட்பட, உறவினர்கள், உடலை பெற்றுக் கொண்டனர். அப்போது, பஞ்சாப் முதல்வர், பாதல் மற்றும் மத்திய அமைச்சர்கள், இருவர் உடனிருந்தனர்.அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம், பஞ்சாபில் உள்ள அவரின் சொந்த ஊரான, பிகிவிண்ட் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று அவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.இந்நிலையில், சரப்ஜித் சிங்கை தாக்கிய, பாக்., கைதிகள், ஆறு பேரில், இருவர் மீது, கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அவர்களிடம், அந்நாட்டு போலீசார் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானியர், 14 பேரை கொன்றதால், பழிவாங்குவதற்காக தாக்கி கொல்ல முயன்றோம் என, கூறியுள்ளனர்.சரப்ஜித் சிங் மரணம் குறித்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண, இடைக்கால முதல்வர், நஜாம் சேத்தி, முழு அளவில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களுக்குள், விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்திஉள்ளார்.
நிதியுதவி

சரப்ஜித் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, 25 லட்ச ரூபாய், வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதே நேரத்தில் பஞ்சாப் மாநில அரசு, ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் எனவும், மகள்கள் இருவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் எனவும், பஞ்சாப் முதல்வர், பாதல் கூறினார்.

காட்டுமிராண்டிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்:

பிரதமர் மன்மோகன் சிங்: சரப்ஜித் சிங், இந்தியாவின் வீரமகன். அவரை இந்தியா கொண்டு வர விடுக்கப்பட்ட கோரிக்கைகளை, பாகிஸ்தான் மதிக்கவே இல்லை; மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டது. அவ ரை கொன்ற காட்டு மிராண்டிகளை, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித்: சரப்ஜித் சிங்குக்கு நேர்ந்த கொடுமை, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பகைமையை புரியவைக்கிறது. இது, மனதளவிலும், உணர்வு ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளின் மக்களுக்கும் நல்ல புரிதல் உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குஜராத் முதல்வர், நரேந்திர மோடி: சரப்ஜித் சிங் விவகாரத்தில், மத்திய அரசு வலுவாக செயல்படவில்லை. தூக்கு தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில், இது போன்ற சண்டை, சச்சரவுகளுக்கு எந்த நாட்டிலும் வாய்ப்பு இருக்காது; அத்தகைய கைதிகள் தனியாக அடைத்து வைக்கப்பட்டுஇருப்பர்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுஷ்மா சுவராஜ்: இது, மிகக் கொடூரமான கொலை. எந்தவொரு நாகரிக நாடும், இது போல் நடந்து கொள்ளாது.பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங்: பாகிஸ்தானின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டுடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும். இது போன்ற வலுவான நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருந்தால், இத்தகைய கொடுமைகள் நடந்திருக்காது.

பா.ஜ., செய்தி தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், முதலைக் கண்ணீர் வடிக்கிறார். 

கடந்த ஒரு வாரமாக, சரப்ஜித் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அமைதி காத்த காங்கிரஸ், இப்போது அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது.பஞ்சாப் முதல்வர், பிரகாஷ் சிங் பாதல்: சரப்ஜித் சிங்கை விடுவிக்க மத்திய அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் போதுமானவை அல்ல. அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்தியா அளித்த பதிலும், குழப்பமாகவே இருந்தது. இந்த விவகாரம் குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர், பிரவீன் தொகாடியா: பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும், இந்தியா இப்போதே துண்டிக்க வேண்டும். இனிமேலும், இது போன்ற, பாகிஸ்தானின் செயல்களை அனுமதிக்க முடியாது.

ராகுல் ஆறுதல்

பாகிஸ்தான் சிறையில், அந்நாட்டு கைதிகளால் அடித்து கொல்லப்பட்ட, இந்தியர், சரப்ஜித் சிங்கின் உறவினர்களை, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சந்திக்க சென்று, நேற்று முன்தினம், அமிர்தசரஸ் திரும்பிய சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, சரப்ஜித் சிங்கை, சிகிச்சைக்காக, இந்தியா கொண்டு வர உதவி செய்யுமாறு, கேட்க உள்ளதாக கூறியிருந்தார்.

இதற்கிடையே, நேற்று அதிகாலை, சரப்ஜித் இறந்து விட்டார். இதனால் சோகத்தில் ஆழ்ந்திருந்த அவரின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நேற்று ஆறுதல் கூறினார்.டில்லியில், சரப்ஜித் உறவினர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற ராகுல், சகோதரி தல்பீர் கவுர், சரப்ஜித்தின் மனைவி சுக்பிரீத் சிங், மகள்கள், பூணம் மற்றும் ஸ்வாபன்தீப் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அவர்களுடன், 40 நிமிடங்கள் இருந்து சோகத்தை பகிர்ந்து கொண்டார்.

சொந்த ஊரில்கொந்தளிப்பு

சரப்ஜித் சிங்கின் சொந்த ஊரான, பஞ்சாபின், அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள பிகிவின்ட் கிராமத்தினர், பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள அந்த கிராமத்தினர் நேற்று, பாகிஸ்தான் கொடியை எரித்தும், அந்நாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பியும், எதிர்ப்பை பதிவு செய்தனர். சரப்ஜித் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று, ஆறுதல் கூறினர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ரூ.25 கோடி கேட்ட பாக்., 

என் தம்பியை விடுவிக்க, பாகிஸ்தானியர், 25 கோடி ரூபாய் கேட்டனர், என, சரப்ஜித் சிங்கின் சகோதரி, தல்பீர் கவுர் கூறினார்.அவர் கூறியதாவது:என் சகோதரனை விடுவிக்க, சரியான ஏற்பாடுகளை செய்யுமாறு, 2005ம் ஆண்டிலிருந்து, மத்திய அரசை நான் வலியுறுத்தி வருகிறேன். இதற்காக முயற்சிகள் எடுத்த, அப்போதைய பிரதமர் வாஜ்பாயை முதலில், பாகிஸ்தானியர்கள் ஏமாற்றினர். இப்போது, மன்மோகன் சிங் முதுகில் குத்தியுள்ளனர். இந்த நாட்டிற்காக, என் தம்பி, தியாகியாகி விட்டான். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் அதிபர், சர்தாரி என் தம்பியை கொன்று விட்டார். பாக்., சிறையில் வாடும் பிற, சரப்ஜித் சிங்குகளுக்காக இனி நான் பாடுபடுவேன்.சரப்ஜித்தை விடுவிக்க, பாக்., மனித உரிமை ஆர்வலர் ஒருவர், 25 கோடி ரூபாய் கேட்டார். நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள் என, மன்றாடி கேட்டதால், 2 கோடி ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாக கூறினார்.

காலையில் பணத்தை கொடுத்தால், மாலையில் விடுதலை செய்யப்படுவான் என, கூறினார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லாததால், என் தம்பியை இழந்து விட்டேன்.இவ்வாறு தல்பீர் கவுர் கூறினார்.சரப்ஜித் சிங்கின் இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்; அவரை தியாகியாக அறிவிக்க வேண்டும் என, சரப்ஜித்தின் குடும்பத்தினர், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் ஷிண்டே உறுதி

டில்லியில் உள்ள, சரப்ஜித் சிங்கின் வீட்டுக்கு நேற்று சென்ற, உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும் போது, சரப்ஜித்தின் உடலை இந்தியாவுக்கு விரைவில் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. வெளியுறவுத்துறை அதிகாரிகள், பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளனர், என்றார்.

வேறு பாதையில் பாக்., பஸ்கள்

சரப்ஜித் சிங் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து, பஞ்சாபில் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடந்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே செல்லும் பஸ்கள், மாற்றுப் பாதையில் விடப்பட்டன. டில்லியிலிருந்து, லாகூர் செல்லும் பஸ்களும், லாகூரிலிருந்து டில்லி வரும் பஸ்களும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

சிவசேனா கட்சியினர், எல்லைப் பகுதியில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உள்துறை உஷார்

பாகிஸ்தான் சிறையில், இந்தியர், சரப்ஜித் சிங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, பாக்., கைதிகளுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரை வழங்கியது.டில்லி, திகார் சிறையில், 20 பாகிஸ்தானியர் அடைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment