கார்த்திக் செய்த தவறு என்ன?
நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் உள்ளே ஒருவருக்கொருவர் எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். “அடுத்ததாக நீங்கள் போகலாம்” என்று அலுவலகப் பணியாளர் அறிவிக்க, கார்த்திக் நேர்முகத் தேர்வு அறை வாசலுக்குச் செல்கிறான். உள்ளே இருக்கும் மூவரும் அவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அறைக் கதவைத் தட்டுகிறான்.
தேர்வாளர் 1:
உள்ளே வாங்க.
கார்த்திக் (நுழைந்தபடியே):
சாரி, உங்கள் கவனத்தை ஈர்க்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் கதவைத் தட்டினேன்.
தேர்வாளர் 2:
உட்காருங்க.
(கார்த்திக் உட்கார்ந்துகொள்கிறான்.)
தேர்வாளர் 3 (கார்த்திக்கின் தன் விவரக் குறிப்பை ஆராய்ந்தபடி):
கல்லூரியில் மாணவர்கள் யூனியனின் ஆஃபீஸ் பேரராக (office bearer) இருந்திருக்கீங்க. எதுக்காக அந்தப் பதவி? சொல்லுங்களேன்.
கார்த்திக்:
மாணவர்களுடைய தேவைகளைப் புரிஞ்சுகிட்டு அதையெல்லாம் அழுத்தமாக கல்லூரி நிர்வாகத்துகிட்டே சொல்வதற்குதான் அந்தப் பதவி சார்.
தேர்வாளர் 1:
அதென்ன அழுத்தமாக?
கார்த்திக் (சங்கடத்துடன்):
சில சமயம் மாணவர்களுடைய நியாயமான கோரிக்கைகளைக்கூட நிர்வாகம் அலட்சியம் செய்யும். அப்போ கொஞ்சம் அழுத்தமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கும்.
தேர்வாளர் 3:
அப்போ நிர்வாகத்துக்கு எதிரா கொடி பிடிச்சுருக்கீங்கன்னு சொல்லுங்க.
தேர்வாளர் 2 (புன்னகைத்தபடி):
ஸ்ரீசாந்த் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில மாட்டிகிட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
கார்த்திக்:
சார், தப்பா நினைக்கக் கூடாது. எனக்கு கால்பந்திலேதான் நிறைய ஆர்வம். கிரிக்கெட்டிலே ஈடுபாடு இல்லை. சொல்லப் போனால் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் மிகவும் அதிகப்படியான முக்கியத்துவம் பற்றி எனக்குக் கொஞ்சம் கோபம்கூட உண்டு.
தேர்வாளர் 3:
எதனாலே கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம்னு நினைக்கிறீங்க?
கார்த்திக்:
பிரிட்டிஷ்காரங்க தொடங்கி வைச்ச மோகம். இன்னமும்கூட நம்மை விட்டுப் போகலே சார்.
இது கார்த்திக்கின் நேர்முகத் தேர்வு. கார்த்திக் இதில் நடந்துகொண்ட விதத்தை இப்போது எடைபோடலாமா?
“உள்ளே வாங்க” என்று கூறிய பிறகு கார்த்திக் உள்ளே நுழைந்தது சரியான நடத்தைதான். ஆனால் கதவைத் தட்டுவதற்குப் பதிலாக, லேசாக கனைக்கலாம். அல்லது “உள்ளே வரலாமா?’’ என்று கேட்டிருக்கலாம்.
“வேறு வழி தெரியவில்லை” என்று கார்த்திக் கூறுவது வேண்டாதது. அதுவும் நுழைந்துகொண்டே இதைச் சொல்வது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மாணவர் சங்கத் தலைவராக கார்த்திக் சிறப்பாகவே செயலாற்றி இருக்கலாம். ஆனால், தேர்வாளர்கள் பொதுவாக முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். தவிர, சில பதவிகளுக்கு எக்கச்சக்கமாக விண்ணப்பங்கள் வரும் நிலையில் தேர்ந்தெடுக்கக் காரணங்களைக் கண்டுபிடிப்பதைவிட, தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தேடுவது சகஜமாகிவிட்டது. இந்த நிலையில் மாணவர் சங்கத் தலைவராக இருந்ததைத் தன்விவரப் பட்டியலில் கார்த்திக் குறிப்பிட்டிருக்க வேண்டாம். ‘இவனை நிறுவனத்தில் சேர்த்தால், பிற ஊழியர்களோடு சேர்ந்துகொண்டு, நிர்வாகத்திற்குச் எதிராகச் செயல்பட வாய்ப்பு உண்டு’ என்கிற எண்ணத்தை அது தோற்றுவிக்கக்கூடும்.
இதெல்லாவற்றையும்விட நிர்வாகத்துக்கு ‘அழுத்தமாக’தெரிவிப்பது என்று கார்த்திக் யோசிக்காமல் கூறிவிட்டான். அழுத்தமாக என்ற வார்த்தை எதிர்மறை எண்ணங்களை இந்த இடத்தில் அளிக்க வாய்ப்பு அதிகம்.
“கிரிக்கெட்டைவிட கால்பந்துதான் எனக்குப் பிடிக்கும்” என்பதோடு கார்த்திக் நிறுத்திக்கொண்டிருந்தால், அது புத்திசாலித்தனம். அதாவது தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றித் தேர்வாளர் கேட்கும்போது, அதை தனக்குத் தெரிந்த ஒரு களனின் புறமாக மாற்றியமைப்பது நல்லதுதான்.
“கால்பந்து தெரிந்த அளவுக்கு கிரிக்கெட் பற்றி எனக்குத் தெரியாது” என்று கூறினால், தேர்வாளர்களில் ஒருவர் மனதிலாவது இப்படி ஒரு எண்ணம் தோன்றக்கூடும்: “ஓ, நீ பெரிய கால்பந்து புலியா? கால்பந்து தொடர்பாகவே ஒரு கேள்வி கேட்டு, உன்னை மடக்குகிறேன்” என்று அவர் சிந்திக்கக்கூடும்.
ஆனால், இரண்டு விஷயங்களில் கார்த்திக் கவனம் செலுத்தவில்லை. சாந்த் தொடர்பான கேள்வி முழுமையாக கிரிக்கெட் தொடர்பானது என்று கூறிவிட முடியாது. ஊழல், நேர்மை போன்ற கோணங்களும் அதில் அடங்கியிருப்பதால், அந்தக் கோணத்தில் கார்த்திக் விடை அளித்திருக்கலாம்.
அதைவிடப் பெரிய தவறு கிரிக்கெட் குறித்து, ஏளனம் கலந்த கருத்தை அவன் வெளிப்படுத்தியது. அவன் கருத்தில் உண்மை உண்டு. என்றாலும் நம்நாட்டின் மிகப் பலரையும் கட்டிப் போட்டிருக்கும் ஒரு விளையாட்டு கிரிக்கெட். தேர்வாளர்களும் அப்படியிருக்க வாய்ப்பு உண்டு. “ஆங்கிலேயர்களின் செயலை இன்னமும் அடிமை புத்தியுடன் பின்பற்றுகிறீர்கள்” எனும் தொனி வரும்படி கார்த்திக் பேசிவிட்டான். மாறாக ‘ஒரு கிரிக்கெட் பந்தயத்தைப் பார்க்க வேண்டுமானால் மிக அதிகமான நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது’ என்பது போன்ற (பலரால் ஒப்புக்கொள்ளக்கூடிய) காரணமாகக் கூறியிருக்கலாம்.
உங்கள் கருத்துகள் மற்றும் நீங்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவற்றை அறிந்துகொள்ளவும், மதிப்பீடு செய்யவும்தான் நேர்முகத் தேர்வு இருக்கிறது. அதே சமயம் இதை மனதில் கொண்டு எப்படிப்பட்ட கருத்துகள் மற்றும் எப்படிப்பட்ட நடத்தை மூலம் தேர்வாளர்களின் நல்லெண்ணத்தைப் பெறலாம் என்று யோசித்துச் செயல்படுவதுதான் உங்களுக்கு வெற்றியைத் தரும்.
No comments:
Post a Comment