Tuesday, 5 November 2013

சுயவிவரக் குறிப்பு என்றால்...


புதிதாக வேலைக்குச் சேர விரும்புவோரும், பணியாற்றும் ஒரு நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்துக்கு மாற நினைப்பவர்களும் பயன்படுத்தும் வார்த்தைகள் கரிகுலம் விட்டே, பயோடேட்டா, ரெஸ்யூமே. மூன்றுமே ஒருவரின் தகுதிகளைப் பட்டியலிடும் முறை என்றாலும், இவற்றில் சின்னச் சின்ன வித்தியாசங்கள் உண்டு.

ரெஸ்யூமே என்பது பிரெஞ்சு வார்த்தை. ரெஸ்யூமே என்றால் சாரம்சம். ஒருவரின் வேலை, படிப்பு, சிறப்புத் தகுதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு. ரெஸ்யூமே ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களில் இருக்கலாம். இதில் தகுதிகளைப் பற்றி விரிவாக இருக்காது. எண்களைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். படிப்பு, வேலை மற்றும் இதர தகுதிகள் பட்டியல் செய்யப்பட்டு இருக்கும். ரெஸ்யூமேவை, ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறுவதற்காகப் பொதுவாகப் பயன்படுத்துவார்கள்.

லத்தீன் மொழியில் கரிகுலம் விட்டே என்றால் வாழ்க்கையில் சந்தித்தவை என்று அர்த்தம். ஒருவரைப் பற்றிய முழு விவரங்களும் எழுத்து மூலமாகக் குறிப்பிடுவதுதான் கரிகுலம் விட்டே. இது இரண்டு பக்கங்களுக்குக் கூடுதலாகவும் இருக்கலாம். இதில் படிப்பு, வேலை பற்றி முழு விவரங்கள் இருக்கும். அதாவது படிப்பு என்றால் கல்லூரியின் பெயர், படித்த ஆண்டு, பெற்ற மதிப்பெண்கள் போன்ற அனைத்து விபரங்களும் இருக்கும். புதிதாக வேலைக்குச் சேர நினைப்பவர்கள் தங்களைப் பற்றி முழு விவரங்களைக் குறிப்பிட உகந்தது கரிகுலம் விட்டே.

கடைசியாக பயோடேட்டா, இது இந்தியர்கள் பெரும்பாலும் தங்களைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தை. பயோகிராபியிலிருந்து உருவான சொல் பயோடேட்டா. இதில் ஒருவரின் வயது, மதம், வீட்டு முகவரி, திருமணமானவரா, ஆணா, பெண்ணா போன்ற விவரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதன் பிறகுதான் படிப்பு, வேலை பற்றிய விவரங்கள் வரும்.

இந்த மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு இனிமேல் சுயவிவரக் குறிப்புகளைத் தயாரிப்போம்.

No comments:

Post a Comment