ஆசிரியர் தகுதி தேர்வில் 'கீ' விடைத்தாளில் தவறுகள்? பதிலளிக்க தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சரியான விடைக்கு, மதிப்பெண் அளிக்காததால், ஆசிரியர் பணி நியமனம் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கும்படி, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணி
காஞ்சிபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, எம்.யுவராஜ் என்பவர், தாக்கல் செய்த மனு:நான், பி.எஸ்சி., பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். கடந்த, ஆகஸ்ட்டில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்து கொண்டேன். இம்மாதம், 5ம் தேதி, தேர்வு முடிவு வெளியானது.எனக்கு, 89, மதிப்பெண் கிடைத்தது. தகுதி தேர்வில், 'கட்-ஆப்' மதிப்பெண், 90 என்பதால், நான் தேர்ச்சி பெறவில்லை.
'கீ' விடைத்தாளை பார்க்கும் போது, அதில், சில விடைகள் தவறாக இருந்தன.இதுகுறித்து, 6ம் தேதி, விரிவான மனுவை, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன்.மூன்று கேள்விகளுக்கு, தவறான விடைகள், 'கீ' விடைத்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மூன்று கேள்விகளுக்கும், எனக்கு மூன்று மதிப்பெண் அளித்திருந்தால், 92, மதிப்பெண் பெற்றிருப்பேன்.ஆசிரியர் பணியும் கண்டிப்பாக கிடைக்கும். தேர்வு வாரியம் செய்த தவறுக்கு, எங்களை தண்டிக்கக் கூடாது.எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, என்னை அனுமதிக்க வேண்டும். அல்லது, பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்தில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். மூன்று மதிப்பெண் அளித்து, எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
நிபுணர்கள் தயாரிப்பு
இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜரானார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ''தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு, இன்னும் யாரும் அழைக்கப்படவில்லை. நிபுணர்களை கொண்டு தான், விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசார ணையை, இம்மாதம், 20ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.''சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் போது, மனுதாரரையும் அனுமதிக்க வேண்டும்; மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து, அது அமையும்,'' என்றும், நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment