புதிய முறையை எதிர்கொள்வது எப்படி?
கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் "சி-சாட்' என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது. பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.
தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும். நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களில், குறைந்தது 5 கேள்விகள் தவறாமல் இடம் பெறும். முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், பிரிவுகள் ஆகியவை பற்றிய பட்டியலை சொந்தமாக தயார் செய்து வைத்து கொள்ளலாம். அறிவியல் பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யூட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும். மொழிப் பாடம் விருப்பப் பாடமாக தமிழை தேர்வு செய்வதா, ஆங்கிலமா என்ற குழப்பம் காணப்படுகிறது. ஆரம்பம் முதல் ஆங்கிலத்தில் படித்து, புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் தமிழை தேர்வு செய்தல் நலம்.
பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். பழைய வினாத்தாள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலேயே கிடைக்கின்றன. "சி-சாட்' வினாக்களை பொறுத்த வரை, சொந்தமாக படிக்க முடியாது என்பதால், பயிற்சி மையத்தில் படிக்கலாம்.
No comments:
Post a Comment