Monday, 18 November 2013

சச்சின்: பாரதத்தின் ரத்தினம்


சச்சினின் கிரிக்கெட் பயணத்தின் இறுதி நாளன்று அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேசம், தன் கதாநாயகர்களில் ஒருவருக்குப் பெருமிதத்துடன் கொடுத்த ஆட்டநாயகர் விருது இது. மிகவும் பொருத்தமான, உணர்ச்சிமயமான ஒரு தருணத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வேறு யாருக்கேனும் இப்படி ஒரு பிரிவு உபச்சாரம் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. கிரிக்கெட்டைக் காதலிக்கும் ஒரு தேசம், கிரிக்கெட்டின் தலைசிறந்த நட்சத்திரத்துக்கு உணர்ச்சிகரமாகப் பிரியாவிடை தருவதில் வியப்பு இல்லை. கிரிக்கெட் உலகம் முழுவதுமே நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் அளவற்ற பாராட்டுணர்வுடனும் இந்த ஜாம்பவானுக்குப் பிரியாவிடை தருகிறது.

கேள்விக்கு அப்பாற்பட்டு உலகின் மரியாதையைப் பெற்றவர் சச்சின். டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், ஷேன் வார்ன் போன்ற தலைசிறந்த ஆட்டக்காரர்களால், மகத்தான ஆட்டக்காரர் எனப் பாராட்டப்பட்டவர் சச்சின். எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன், எத்தகைய தாக்குதலையும் முனை முறிக்கும் வலிமை, மட்டை வீச்சில் மாற்றங்களைக் கொண்டுவரும் புதுமை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த சச்சினை கிரிக்கெட் உலகம் கொண்டாடுவதில் வியப்பில்லை.

கிரிக்கெட்டின் வரையறைகளை மாற்றி எழுதிய ஒரு மகத்தான சாதனையாளருக்கு இவை அத்தனையும் தகும். இந்திய கிரிக்கெட்டில் திறமைசாலிகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், உலகில் எல்லா அணிகளுக்கும் சவால்விடக்கூடிய, எதிரணியினரின் தூக்கத்தைக் கெடுக்கக்கூடிய திறமைசாலிகள் மிக அரிதானவர்கள். பன்முகத் திறமைகளும் அசராத போர்க்குணமும் சேர்ந்திருப்பதும் அரிது. அத்தகைய அரிய ஆட்டக்காரர்களில் முதன்மையானவர் டெண்டுல்கர்.

16-வது வயதில் களம்கண்ட சச்சின், தன் கிரிக்கெட் வாழ்வின் பெரும் பகுதியில் ஒற்றை ஆளாக நின்று போராடியிருக்கிறார். பந்து வீச்சிலோ மட்டை வீச்சிலோ துணை அதிகம் இல்லாத சூழலில், அசாத்தியமான அர்ப்பணிப்புணர்வுடன் ஒற்றைப் போராளியாகக் களத்தில் நின்றிருக்கிறார். பலவீனமான இந்திய அணியால் வரும் நெருக்கடி, எதிரணியின் வலுவால் எழும் நெருக்கடி, கோடிக் கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு என்னும் மாபெரும் நெருக்கடி ஆகிய அனைத்தையும் சுமந்து ஆடிக்கொண்டிருந்த அவருடைய மட்டை இப்போது ஓய்ந்திருக்கிறது.

ஒரு நாயகனுக்காக ஏங்கிய தேசம், சச்சினிடத்தில் அந்த நாயகனைக் கண்டுகொண்டது. அவருடைய பங்களிப்பு, இவரைப் போல நானும் வர வேண்டும் என்னும் கனவைக் கோடிக் கணக்கானவர்கள் மனங்களில் விதைத்திருக்கிறது. மேலும் மேலும் திறமைசாலிகள் உருவாகவும், அவர்கள் ஆட்டத்தின் வரையறைகளை மாற்றி எழுதுவதற்குமான உத்வேகத்தைத் தந்திருக்கிறது. களத்தில் கடுமையான போராட்டங்கள், உடல் காயங்கள், உளவியல் நெருக்கடிகள், தவறிழைத்த நடுவர்கள் எனப் பல தடைகளையும் தாண்டி இறுதிவரை போராடியவர் சச்சின். ஒப்பற்ற திறமைகளும், அசாத்தியமான தன்னடக்கமும் இணைந்திருந்த அபூர்வக் கலவை அவர்.

சுதந்திர இந்தியாவில் இத்தனை கோடி மக்களின் அன்புக்கும் ஆராதனைக்கும் பாத்திரமானவர்கள் மிகச் சிலரே. மனம் நிறைந்த நன்றியுடன் அவருக்கு விடைகொடுப்போம்.

No comments:

Post a Comment