நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிலை மாறி ஜிடிபி உயர்ந்துள்ளது, நிதி அமைச்சக வட்டாரத்தில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
வேளாண்துறை, உற்பத்தித்துறை, கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளின் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததே இந்த உயர்வுக்குமுக்கியக் காரணமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வளர்ச்சி குறித்த அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு பொருளாதார விவகாரத்துறைச் செயலர் அர்விந்த் மாயாராம் கூறும்போது, "வளர்ச்சியானது மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் எட்ட முடியும் என்று ஏற்கெனவே கூறிவந்தேன். இருப்பினும் இரண்டாம் காலாண்டிலேயே முதல் காலாண்டை விட வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.
No comments:
Post a Comment